

ரோம்,
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் சர்வதேச இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. களிமண் தரை மைதானத்தில் நடைபெறும் இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், விம்பிள்டன் சாம்பியனுமான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில், எலினா ஸ்விடோலினா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கிற்கு அதிர்ச்சி தோல்வியளித்து, ஸ்விடோலினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், எலினா ஸ்விடோலினா, நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் இளம் நட்சத்திரம் கோகோ காப்பை எதிர்கொள்ள உள்ளார். சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.