ஒரே தொடரில் 3 பட்டங்கள்... ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய இளம் வீராங்கனை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரிணியுடன் இணைந்து மகளிர் 16 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் குஷி பட்டம் வென்றிருந்தார்.
ஒரே தொடரில் 3 பட்டங்கள்... ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய இளம் வீராங்கனை
Published on: 

புதுடெல்லி,

ஒரே தொடரில் 3 பட்டங்கள் வென்று குஷி காடியன் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

குஷி காடியன்

31-வது பெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியானாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை குஷி காடியன், ஒரே தொடரில் 3 பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், அடுத்த நாளே 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவுகளிலும் சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

கடும் போட்டி

இத்தொடரில் நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குஷி காடியன், ரஞ்சனா சங்கராமை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், குஷி 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

வெற்றி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீராங்கனையான சித்தி பாண்டேவை எதிர்கொண்டார் குஷி. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஒரே தொடரில் மூன்று பட்டங்கள்

இதற்கு முந்தைய நாளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சன்மிதா ஹரிணியுடன் இணைந்து மகளிர் 16 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் குஷி பட்டம் வென்றிருந்தார். இதன் மூலம் இரட்டையர் பிரிவில் ஒரு பட்டம், ஒற்றையர் பிரிவில் இரண்டு பட்டங்கள் என மொத்தம் மூன்று பட்டங்களை வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இளம் வயதிலேயே தேசிய அளவிலான போட்டியில் அவர் படைத்துள்ள இந்தச் சாதனை கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com