ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து ஒசாகா புதிய சாதனை: செரீனாவை பின்னுக்கு தள்ளினார்

செரீனாவை பின்னுக்கு தள்ளி, ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து ஒசாகா புதிய சாதனை படைத்தார்.
ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து ஒசாகா புதிய சாதனை: செரீனாவை பின்னுக்கு தள்ளினார்
Published on

நியூயார்க்,

அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஓராண்டில் உலக அளவில் அதிகம் சம்பாதித்த டாப்-100 வீரர், வீராங்கனைகளின் பட்டியலை தயாரித்துள்ளது. அடுத்த வாரம் இந்த பட்டியல் வெளியாகிறது.

பரிசு மற்றும் விளம்பர ஒப்பந்தம் மூலம் ஈட்டப்படும் வருவாய் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த பணக்கார பட்டியலில் டென்னிஸ் வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்) 29-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 33-வது இடத்திலும் இருப்பதாக போர்ப்ஸ் அறிவித்துள்ளது.

அதே சமயம் அதிக சம்பாதிக்கும் வீராங்கனைகள் என்று பார்த்தால், முதல் முறையாக ஒசாகா நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் அவரது வருமானம் ரூ.284 கோடியாகும். அவர் 15 விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் உள்ளார். இதன் மூலம் அவருக்கு பணமழை கொட்டுகிறது. அத்துடன் ஒரு ஆண்டில் அதிகம் சம்பாதித்த வீராங்கனை என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷிய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா 2015-ம் ஆண்டில் ரூ.225 கோடி வருவாய் ஈட்டியதே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஒசாகா முறியடித்து விட்டார்.

22 வயதான ஒசாகா 2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபனையும், 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனையும் கைப்பற்றி அசத்தினார். அதைத் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்த முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். தற்போது அவர் டென்னிஸ் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கிறார்.

பெண்களில் நிறைய சம்பாதிக்கும் வீராங்கனையாக கடந்த 4 ஆண்டுகளாக செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவரது ஆதிக்கத்தை இந்த இளம் புயல் முடிவு கட்டியுள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த சீசனில் சம்பாதித்த தொகை ரூ.273 கோடியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com