காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!

சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!
Published on

புதுடெல்லி,

டென்னிஸ் இரட்டையர் பிரிவில், உலகின் நம்பர்.1 வீராங்கனையாக இருந்த சீனாவின் பெங்க் சுயாய், கடந்த நவம்பர் 2ம் தேதியன்று சீன சமூக வலைத்தளங்களில், சீன அரசில் உயர்பதவி வகித்த ஸாங் கேவ்லி, தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்ள செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சீன அரசாங்கம் அந்த பதிவை நீக்கிவிட்டது. அவருடைய அந்த குற்றச்சாட்டு குறித்து சீன அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அவருடைய அந்த பதிவிற்கு பின் அவரை காணவில்லை என்று புகார் எழுந்தது. அவரை பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. அவரை யாரும் பார்க்கவோ அல்லது அவரை பற்றி கேள்விப்படவோ இல்லை என்று சொல்லப்படுகிறது. சர்வதேச தளத்தில் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் டிக் பவுண்ட் கூறுகையில், சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில், சீனாவில் டென்னிஸ் போட்டிகள் நடத்துவதை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களுடைய இந்த முடிவுக்கு உலகின் நம்பர்.1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com