பெட் கோப்பை டென்னிஸ் அமெரிக்க அணி 18-வது முறையாக ‘சாம்பியன்’

பெட் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க அணி 3-2 என்ற கணக்கில் பெலாரஸ் அணியை வீழ்த்தி 18-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெட் கோப்பை டென்னிஸ் அமெரிக்க அணி 18-வது முறையாக ‘சாம்பியன்’
Published on

மின்ஸ்க்,

டேவிஸ் கோப்பை போட்டி போல், டாப்-8 பெண்கள் அணிகளுக்கு பெட் கோப்பை டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் பெலாரஸ் நாட்டில் உள்ள மின்ஸ்க் நகரில் நடந்தது.

இறுதிப்போட்டியில் அமெரிக்கா-பெலாரஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ வாண்டேவெஜ் 6-4, 6-4, என்ற நேர்செட்டில் செர்பிய வீராங்கனை அலியாக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் செர்பியா வீராங்கனை அர்னா சபலெங்கா 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தினார்.

மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் கோகோ வாண்டேவெஜ் (அமெரிக்கா) 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் அர்னா சபலெங்காவையும் (செர்பியா), அலியான்சான்ட்ரா சாஸ்னோவிச் (செர்பியா) 4-6, 6-1, 8-6 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்சையும் (அமெரிக்கா) தோற்கடித்தனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.

பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இரட்டையர் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பரபரப்புக்கு மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஷெல்பை ரோஜர்ஸ்-கோகோ வாண்டேவெஜ் ஜோடி 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அர்னா சபலெங்கா-அலியாசான்ட்ரா சாஸ்னோவிச் இணையை சாய்த்தது. இதன் மூலம் அமெரிக்க அணி 3-2 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 18-வது முறையாகும். 2000-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அணி கோப்பையை வெல்வது இது முதல்முறையாகும். பெட் கோப்பையை அதிக முறை வென்ற அணி அமெரிக்கா தான். அதற்கு அடுத்தபடியாக செக்குடியரசு அணி 10 முறை வென்றுள்ளது. முதல்முறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறிய செர்பியா அணி சொந்த மண்ணில் கோப்பையை ஏந்தும் நல்ல வாய்ப்பை தவறவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com