ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய ரபெல் நடால், நவோமி ஒசாகா..!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய ரபெல் நடால், நவோமி ஒசாகா..!!
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோனை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் நடால் இந்த வெற்றியை பெற 1 மணி 49 நிமிடம் தேவைப்பட்டது. 35 வயதான நடால் ஆஸ்திரேலிய ஓபனில் பெற்ற 70-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-3), 6-1, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரரான டேனியல் அல்ட்மாய்ரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 38 நிமிடம் நடந்தது.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் பெரேட்டினி சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-2, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரன்டன் நகாஷிமாவை சாய்த்து 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 3 மணி 10 நிமிடம் நீடித்தது. தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 3-6, 0-6, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

மற்ற ஆட்டங்களில் டேனிஸ் ஷபோவாலோவ் (கனடா), ஜான் மில்மேன் (ஆஸ்திரேலியா), ஹூபர்ட் ஹூர்காஸ் (போலந்து), மான்பில்ஸ் (பிரான்ஸ்), கரென் கச்சனோவ் (ரஷியா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்), மெக்கன்சி மெக்டொனால்டு (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் மெல்போர்ன் சென்று சர்ச்சையில் சிக்கியதால் ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்ததுடன், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. இதனால் அவர் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பு பறிபோனதுடன், அவரது 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சிக்கும் முட்டுக்கட்டை விழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்) 68 நிமிடத்தில் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1, 6-0 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய வீராங்கனையான லிசி சுரெங்கோவை (உக்ரைன்) 54 நிமிடங்களில் வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு தாவினார்.

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் பெட்கோவிச்சை துவம்சம் செய்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்) 6-4, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனின் 6-7 (2-7), 5-7 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸ்சிடம் பணிந்து நடையை கட்டினார்.

மற்ற ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பாலா படோசா (ஸ்பெயின்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோர் வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com