

லண்டன்,
டென்னிஸ் அரங்கின் ஜாம்பவானாக கருதப்படுபவர் சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர் காயம் காரணமாக நீண்ட மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த உயரிய அந்தஸ்து கொண்ட கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் போட்டியிலும் காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. மீண்டும் இவர் எப்போது களத்துக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர் தனது ஓய்வு முடிவு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர், " "நான் வெற்றியை விரும்புபவன், ஆனால் இனியும் சவாலாக ஆட முடியவில்லை எனில் விளையாடுவதை நிறுத்துவது சிறந்தது. மகிழ்ச்சியாக இருக்க எனக்கு டென்னிஸ் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இப்பொது நான் சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி அடைகிறேன். என் மகன் எதையாவது சரியாக செய்யும் போதும் என் மகள் நன்றாக மதிப்பெண் பெறும் போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தொழில்முறை வாழ்க்கையில் நிரந்தரமாக நீடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.