உலக டென்னிஸ் தரவரிசையில் ரஷிய வீரர் மெட்விடேவ் 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தி இருக்கிறார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் ரஷிய வீரர் மெட்விடேவ் 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்
Published on

நியூயார்க்,

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 15 ஆண்டுகளாக ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த 4 வீரர்களும் தான் தங்களுக்குள் மாறி, மாறி டாப்-2 இடங்களை ஆக்கிரமித்து வந்தனர். இந்த 4 முன்னணி வீரர்களை தாண்டி யாரும் முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.

கடைசியாக 2005-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒரு வாரம் ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் தர வரிசையில் 2-வது இடத்தை அலங்கரித்தார். அதன் பிறகு மேற்கண்ட இந்த 4 வீரர்களின் முற்றுகை தான் நீடித்து வந்தது.

மெட்விடேவ் தகர்த்தார்

தரவரிசையில் டாப்-2 இடத்தில் நிலவி வந்த நீண்ட கால ஆதிக்கத்துக்கு 25 வயது ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த டேனில் மெட்விடேவ் (9,940 புள்ளிகள்) கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் 15 ஆண்டுகளில் 4 முன்னணி வீரர்களை தவிர்த்து 2-வது இடத்துக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 2-வது இடத்தில் இருந்த 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 34-வது வயது ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,670 புள்ளிகள்) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் (12,008 புள்ளிகள்) மாற்றமின்றி தொடருகிறார்.

நம்பிக்கையை அதிகரிக்கும்

கடந்த ஆண்டு நடந்த உலக டூர் இறுதி சுற்று போட்டியில் ஜோகோவிச், ரபெல் நடால், டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று கலக்கிய மெட்விடேவ் இதுவரை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சி முகர்ந்தது கிடையாது. 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் ரபெல் நடாலிடம் போராடி தோல்வியை தழுவிய அவர் இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார்.

தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கும் மெட்விடேவ் அளித்த ஒரு பேட்டியில், என்னை பொறுத்தமட்டில் இதனை அற்புதமான சாதனை படிக்கல்லாக உணருகிறேன். இந்த நிலையை ஒன்றிரண்டு போட்டிகளின் மூலம் நான் எட்டிவிடவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் வீரர்கள் மீது அதிக மரியாதை வைத்து இருக்கிறேன். நான் 2 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். நான் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த முன்னேற்றம் நிச்சயம் எனது நம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com