

நடால்- டிமிட்ரோவ்
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), சர்வீஸ் போடுவதில் கில்லாடியான மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) எதிர்கொண்டார். 2 மணி 44 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-4, 7-6 (9-7), 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்தார். காயத்தால் தனது ஆட்டத்திறனிலும், தரவரிசையிலும் பெரும் சறுக்கலை சந்தித்து வந்த நடால் புதிய சீசனில் எழுச்சி பெற்றிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் அரைஇறுதியை எட்டுவது 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பதிவு செய்த 50-வது வெற்றியாகவும் இது அமைந்தது.
இன்னொரு ஆட்டத்தில் 15-ம் நிலை வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) சாய்த்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். டிமிட்ரோவ் அடுத்து நடாலுடன் நாளை பலப்பரீட்சையில் இறங்குகிறார்.
செரீனா-பரோனி
பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில், 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை பந்தாடினார். 10 ஏஸ் சர்வீஸ்களை போட்டு மிரட்டிய செரீனா 75 நிமிடங்களில் வெற்றியை ருசித்ததுடன், ஆஸ்திரேலிய ஓபனில் 8-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள 35 வயதான செரீனா இங்கு மகுடம் சூடினால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 79-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனி 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி 5-ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு செக் வைத்தார். 5 டபுள் பால்ட் செய்த பரோனி, பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தானாகச் செய்யக்கூடிய தவறுகளையும் எதிராளியை விட அதிக முறை (35 முறை) இழைத்தார். என்றாலும் தனது அதிரடியான ஷாட்கள் மூலம் வெற்றியை தனதாக்கினார்.
நம்ப முடியவில்லை
1998-ம் ஆண்டு முதல், ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி வரும் பரோனி இதற்கு முன்பு 2-வது சுற்றை தாண்டியது இல்லை. அதே சமயம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதி சுற்றை அடைவது இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே 1999-ம் ஆண்டு விம்பிள்டன் ஓபனில் அரைஇறுதி வரை வந்திருக்கிறார். 34 வயதான பரோனி கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மீண்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது என்று கூறி பரவசப்பட்டார்.
பரோனி இன்று நடைபெறும் அரைஇறுதியில் செரீனா வில்லியம்சுடன் மோதுகிறார். இருவரும் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு இரண்டு முறை சந்தித்து அதில் செரீனா வெற்றி கண்டிருந்தார். 19 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். இன்னொரு அரைஇறுதியில் அமெரிக்க வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ்- வான்டேவேக் மோத உள்ளனர்.
சானியா ஜோடி வெற்றி
கலப்பு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா- கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணையுடன் மல்லுகட்டியது. இதில் இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில், சூப்பர் டைபிரேக்கரில் நீயா-நானா என்று அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் 10-10 என்று சமநிலை நீடித்தது. அதன் பிறகு போபண்ணா ஜோடி பந்தை வெளியே அடித்து விட்டு அடுத்தடுத்து தவறுகள் செய்ய, வெற்றிக்கனி சானியா ஜோடியின் மடியில் விழுந்தது.
67 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் சானியா-டோடிக் கூட்டணி 6-4, 3-6 (12-10) என்ற செட் கணக்கில் போபண்ணா இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா ஜோடி அடுத்து லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) அல்லது சமந்தா ஸ்டோசுர்- சாம் குரோத் (ஆஸ்திரேலியா) ஆகிய இணைகளில் ஒன்றை சந்திக்கும்.