

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமாக வருவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகும். இந்த சீசனுக்கான 139-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் முன்னாள் சாம்பியன்களான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ரஷியாவின் மரிய ஷரபோவாவும் முதல் சுற்றில் நேர் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருப்பது சுவாரஸ்யமான அம்சமானது. இரு நட்சத்திர வீராங்கனைகள் மோதுவதால் ஆட்டம் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் ஆட்டத்தை செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய ஆவேசத்தால் முடக்கினார்.
அதிக ஆவேசத்துடன் ஆட்டத்தை தொடங்கிய செரீனா வில்லியம்ஸ் இறுதி வரையில், ஷரபோவாவை சர்வீஸ்களால் திணறடித்து, அவருடைய சர்வீஸ்களை எளிதாக உடைத்தெறிந்தும், பம்பரமாக சுழன்று ஆட்டத்தை தன்வசப்படுத்தினார்.
59 நிமிடங்கள் மட்டுமே ஆட்டத்தை நடைபெற அனுமதித்த செரீனா, மரிய ஷரபோவாவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக தோற்கடித்து முதல் சுற்றிலேயே வெளியேற்றினார். ஷரபோவாவுக்கு எதிராக செரீனா தொடர்ந்து பெறும் 19-வது வெற்றியாகும்.
செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றில் அமெரிக்கா வீராங்கனையும், வைல்டு கார்டு மூலம் வந்துள்ள கேட்டி மெக்நாலேயுடன் மோதவுள்ளார். செரீனாவிற்கு இது எளிதான விளையாட்டாகவே அமையும் என பார்க்கப்படுகிறது.
இதுவரையில் 23 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் 24-வது பட்டத்தை வெல்ல மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக இறுதிப்போட்டி வரையில் செல்லும் அவரால் பட்டத்தை வெல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை மார்ட்க்ரெட் கோர்ட் மட்டுமே வென்றுள்ளார். அவரின் சாதனையை ஈடு செய்ய செரீனா வில்லியம்ஸ் முயற்சி செய்து வருகிறார். டென்னிஸ் புயல் செரீனாவிற்கு இம்முறை அந்த வாய்ப்பு கிட்டுமா? என்பது அடுத்தடுத்த விளையாட்டுகளில் தெரியவரும். இளம் வீராங்கனைகளும் செரீனாவிற்கு சவாலாகவே விளங்கி வருகிறார்கள்.
ஷரபோவாவை வென்றது தொடர்பாக செரீனா வில்லியம்ஸ் பேசுகையில், ஷரபோவா சிறந்த வீராங்கனையாவார். அவருடன் விளையாடும் போது சிறந்த பயிற்சியுடன்தான் வரவேண்டும். அதன்படி தயாராகியிருந்தேன். எப்போது விளையாட வந்தாலும் சிறந்த டென்னிஸைத்தான் வெளிப்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.