

மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களில் 32 பேருக்கு போட்டித்தரவரிசை வழங்கப்படுவது வழக்கம்.
இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலிய அரசால் விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜோகோவிச் வழக்கு தொடர்ந்து சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டார். அதைத் தொடர்ந்து அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு இன்னும் சாத்தியக்கூறு இருப்பதால் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்வதில் தொடர்ந்து கேள்விக்குறி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
போட்டித்தரநிலையில் 2-வது இடத்தை டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தை அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) பெற்றுள்ளனர். முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-வது இடத்தில் இருக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டிக்கு முதலிடமும், அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) 2-வது இடமும், கார்பின் முகுருஜாவுக்கு (ஸ்பெயின்) 3-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.