அமெரிக்க ஓபன் டென்னிஸ் “சாம்பியன்” பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு நேர் செட்டில் அமெரிக்க ஜாம்பவான் செரீனாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் “சாம்பியன்” பியான்கா ஆன்ட்ரீஸ்குவின் எழுச்சி
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் கடந்த 2 வார காலம் நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா), தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பியான்கா ஆன்ட்ரீஸ்குடன் (கனடா) மல்லுகட்டினார்.

21 ஆண்டுகள் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த செரீனா வில்லியம்சுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்ட நிலையில் இளம் புயல் ஆன்ட்ரீஸ்கு விசுவரூபம் எடுத்தார்.

அதிவேகமான ஷாட்டுகள் மூலம் மிரள வைத்த ஆன்ட்ரீஸ்கு, செரீனாவின் இரண்டு சர்வீஸ்களை முறியடித்து முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் ஆன்ட்ரீஸ்குவின் ஆதிக்கமே முதலில் ஓங்கியது. ஒரு கட்டத்தில் 5-1 என்று முன்னிலையுடன் வெற்றிக்கனியை நெருங்கினார். அந்த சமயத்தில் எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட செரீனா வரிசையாக 4 கேம்களை வென்று 5-5 என்று சமனுக்கு கொண்டு வந்தார். உள்ளூர் ரசிகர்களின் கரகோஷமும், ஆதரவும் செரீனாவுக்கு தாறுமாறாக இருந்தது.

ஆனாலும் செரீனாவின் எழுச்சி சிறிது நேரத்திலேயே அடங்கிப் போனது. அடுத்த இரு கேம்களை தனதாக்கிய ஆன்ட்ரீஸ்கு இறுதியில் செரீனா தொட முடியாத அளவுக்கு ஒரு வலுவான ஷாட் அடித்து வெற்றிக்குரிய புள்ளியை சேகரித்து அதிர்ச்சி அளித்தார்.

1 மணி 40 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை சாய்த்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடம் சூடினார். 8 டபுள் பால்ட்டும், பந்தை 33 முறை வெளியே அடித்தும் செய்த தவறுகள் செரீனாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

கனவு நனவான சந்தோஷத்தில் உணர்ச்சி வசப்பட்ட 19 வயதான பியான்கா ஆன்ட்ரீஸ்கு மைதானத்தில் சில வினாடிகள் உருண்டு புரண்டு முத்தமிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கனடா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க ஓபனில் பிரதான சுற்றில் அடியெடுத்து வைத்த முதலாவது ஆண்டிலேயே பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பும் பியான்கா ஆன்ட்ரீஸ்குவுக்கு கிடைத்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், செரீனா தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்த போது, ஆன்ட்ரீஸ்கு பிறக்ககூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாகை சூடிய பியான்கா ஆன்ட்ரீஸ்கு ரூ.27 கோடியும், 2-வது இடத்தை பிடித்த செரீனா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் ஆன்ட்ரீஸ்கு இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

37 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வென்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் குவித்த சாதனையாளரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். இந்த முறை அச்சாதனையை எட்டும் முனைப்புடன் காத்திருந்த செரீனாவின் கனவை ஆன்ட்ரீஸ்கு தகர்த்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com