விம்பிள்டன் டென்னிஸ் ஆன்டி முர்ரே, வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே, முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் ஆன்டி முர்ரே, வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி
Published on

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதும், பழம் பெருமை வாய்ந்ததுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 134-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் பப்லிக்கை (கஜகஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சோங்கா 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வைல்டு கார்டு வீரர் கேமரூன் நோரியை விரட்டியடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

காயத்தால் விலகல்

பிரான்ஸ் வீரர் பிர்ரே ஹூஜெஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் 3-6, 4-6 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் காயம் காரணமாக விலகினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மார்கோ செஷினோடாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), பினோய்ட் பைரே (பிரான்ஸ்), கரென் காஷ்னோவ் (ரஷியா), சிமோன் பாலெலி (இத்தாலி), ஜெரி ஜானோவிச் (போலந்து), நிகோல்ஸ் (ஜார்ஜியா), சாம் குயரி (அமெரிக்கா), புளோரியன் மேயர் (ஜெர்மனி), டஸ்டின் பிரோவ்ன் (ஜெர்மனி), பாடிஸ்டிடா அகுட் (ஸ்பெயின்), டொனால்டு யங் (அமெரிக்கா), தியாகோ மொன்டெரியோ (பிரேசில்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

வீனஸ் வில்லியம்ஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (9-7), 6-4 என்ற நேர்செட்டில் எலிஸ் மெர்டென்ஸ்சை (பெல்ஜியம்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-4, 6-1 என்ற நேர்செட்டில் மரினா எராகோவிச்சை (நியூசிலாந்து) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்ற ஆட்டங்களில் கிவிடோவா (செக்குடியரசு), எலினா சிடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கமிலா ஜியோர்ஜி (இத்தாலி), கரினா வித்தோப்ட் (ஜெர்மனி), பார்பரா ஸ்டிரிகோவா (செக் குடியரசு), நோமி ஒசாகா (ஜப்பான்), மரியா சக்காரி (கிரீஸ்), கிறிஸ்டினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com