உலக ஆண்கள் டென்னிஸ்: பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் வெற்றி

உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் வெற்றி பெற்றார்.
உலக ஆண்கள் டென்னிஸ்: பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் வெற்றி
Published on

லண்டன்,

உலக தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

வருகிற 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி போரிஸ் பெக்கர் அணி பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், பீட் சாம்ப்ராஸ் அணி பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

2-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா), 6-வது இடத்தில் இருக்கும் கிரிகோர் டிமிட்ரோவ்வை (பல்கேரியா) சந்தித்தார். இதில் முதல் செட்டை டிமிட்ரோவ் எளிதில் தன்வசப்படுத்தினார்.

2-வது மற்றும் கடைசி செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக நீடித்தது. 2 மணி 21 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார்.

இரட்டையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் இணையான பாப் பிரையன்-மைக் பிரையன் (அமெரிக்கா) சகோதரர்கள் 7-5, 6-7 (3-7), 10-8 என்ற செட் கணக்கில் ஜமி முர்ரே (இங்கிலாந்து)-புருனோ சோர்ஸ் (பிரேசில்) இணையை சாய்த்தது.

முந்தைய நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 5-வது இடத்தில் உள்ள மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் மரின் சிலிச்-ஜாக் சோக், ரோஜர் பெடரர்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com