

லண்டன்,
டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் போரிஸ் பெக்கர் அணி பிரிவில் அங்கம் வகித்த அமெரிக்க வீரர் ஜாக் சோக் தனது கடைசி லீக்கில் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்தார். 2-வது வெற்றியை ருசித்த ஜாக்சோக் இந்த பிரிவில் 2-வது வீரராக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த தொடரில் அமெரிக்க வீரர் ஒருவர் அரைஇறுதியை எட்டுவது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3 வெற்றிகளுடன் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஒரு வெற்றி, 2 தோல்வி), குரோஷியாவின் மரின் சிலிச் (3 லீக்கிலும் தோல்வி) ஆகியோர் வெளியேறினர்.
பீட் சாம்ப்ராஸ் அணி பிரிவில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதியை எட்டினார். கோபின் அரைஇறுதியில், 6 முறை சாம்பியனான பெடரருடன் மோத இருக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா)- ஜாக் சோக் சந்திக்கிறார்கள்.