

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன. கொரோனாவால் தடைப்பட்டு இருக்கும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளை ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியுடன் (ஆகஸ்டு 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை) மீண்டும் தொடங்க உலக பேட்மிண்டன் சம்மேளனம் திட்டமிட்டு புதிய போட்டி அட்டவணையை அறிவித்து இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவது கடினமான காரியம் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம், உலக பேட்மிண்டன் சம்மேளனத்துக்கு தெரிவித்து இருந்தது. இதையடுத்து இரு அமைப்புகளின் ஒப்புதலுடன் ஐதராபாத் ஓபன் போட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதேபோல் ஆஸ்திரேலிய ஓபன் (ஜூன் 2-7) மற்றும் கொரியா மாஸ்டர்ஸ் (நவம்பர் 24-29) பேட்மிண்டன் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.