உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு - யுஸ்வேந்திர சாஹல் சொல்கிறார்

உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.
Published on

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டியில் விளையாடுகையில் நிச்சயம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கும், குல்தீப் யாதவுக்கும் இடையிலான நம்பிக்கை பெரிய விஷயமாகும். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக நம்புகிறோம். இருவரும் கூட்டாக கலந்து ஆலோசித்து செயல்பட்டு வருகிறோம்.

விராட் கோலி, டோனி மற்றும் சீனியர் வீரர்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செயல்படுவோம். நான் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் அங்குள்ள சூழ்நிலை எனக்கு தெரியும்.

கடந்த முறை நான் இங்கிலாந்தில் விளையாடுகையில் அங்குள்ள சூழ்நிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இந்தமுறை நிச்சயம் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை கடினமானதுதான். உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக பங்கேற்க இருப்பதால் நான் இந்த போட்டியை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

உலக கோப்பையில் இருக்கும் நெருக்கடியை சந்தித்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். சுழற்பந்து வீச்சாளர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். நமது பந்துவீச்சு சிறப்பாக அமையாவிட்டாலும் பயமின்றி செயல்பட வேண்டியது முக்கியம். அப்படி செயல்படாவிட்டால் நமது திட்டங்கள் அனைத்தும் தவறாக அமைந்துவிடும்.

உலக கோப்பை போட்டிக்கான நமது அணி வலுவானதாகும். நம்மைத்தவிர இங்கிலாந்தும் வலுவானதாகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கும். என்னை பொறுத்தமட்டில் இந்திய அணிதான் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் இருப்பதால் நாம் நிச்சயம் உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com