புதுடெல்லி,
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், கடினமான தண்டனையான ஆயுட்கால தடையை எல்லா வழக்குகளிலும் அமல்படுத்தக்கூடாது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 3 மாத காலத்துக்குள் ஸ்ரீசாந்திடம் விசாரணை நடத்தி அவரது தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.