உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை ஹம்பி ஏமாற்றம்

ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோனெரு ஹம்பி உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Published on

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, அதைத் தொடர்ந்து அங்கேயே நடந்த மற்றொரு துரித வகை போட்டியான உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். இதில் முதல் நாளில் 9 ரவுண்ட் முடிவில் ஹம்பி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். 2-வது நாளான நேற்று முன்தினம் அவர் ஏமாற்றத்துக்கு உள்ளானார். இரண்டாவது நாளில் முதல் 5 ரவுண்டுகளில் 2 வெற்றி, 3 டிரா கண்டு நல்ல நிலையில் இருந்தார். ஆனால் கடைசி 3 ரவுண்டுகளில் வரிசையாக தோல்வியை தழுவியதால் பின்னடைவு ஏற்பட்டது. 17 சுற்று முடிவில் 32 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கோனெரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி 25-வது இடத்தை பெற்றார். நடப்பு சாம்பியனான ரஷியாவின் கேத்ரினா லாக்னோ 13 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து பட்டத்தை தக்க வைத்தார்.

21 ரவுண்ட் கொண்ட இதன் ஆண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென் தொடர்ந்து 3-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார். கார்ல்செனும், அமெரிக்காவின் ஹிகரு நகமுராவும் தலா 16 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த நிலையில் டைபிரேக்கரில் கார்ல்சென் பட்டத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே ரேபிட் பிரிவிலும் கார்ல்சென் பட்டத்தை வென்று இருந்தார். இரண்டு பிரிவிலும் மகுடம் சூடிய வகையில் அவருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com