

பெர்லின்,
இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இஷா சிங் ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை இஷா சிங் முன்னேறி இருந்தார்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட இஷா சிங் இலக்குகளை துல்லியமாக தாக்கினார். இறுதியில் 50-க்கு 43 புள்ளிகளைக் கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், தங்கப் பதக்கத்தையும் வென்றார். இந்த தொடரில் இஷா சிங் 43 புள்ளிகளுடன் தங்கம் வென்றதன் மூலம் புதிய சாதனையை படைத்தார்.
ஏற்கனவே, தென் கொரியா வீராங்கனையின் கிம் யே-ஜி 42 புள்ளிகளை பெற்றதே இதுவரை உலக சாதனையாக இருந்ததை இஷா சிங் முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்க வெற்றியின் மூலம், இந்த ஆண்டின் இறுதியில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இஷா சிங் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பாதாவது:-
’ஐதராபாத்தைச சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீராங்கனையின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது. அவர் லட்சக்கணக்கானோருக்கு உத்வேகமாகத் திகழ்கிறார். அவரது குறிப்பிடத்தக்க செயல்பாடு, இந்திய விளையாட்டின் எதிர்காலத்தைப் பிரதிபலிப்பதோடு, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. இஷா சிங் எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். அவர் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இஷா சிங்கிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.