அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மர்மச்சாவு தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் தாக்கப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மர்மச்சாவு தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுருகு (வயது 47). இவர் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மகன் தினஷேகுமார்(26). இதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(62). இவரது மகன்கள் செல்லமுத்து(35), செல்லப்பாண்டி(30).

இந்த இரு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் நேற்று முன்தினம் செல்லப்பாண்டி ஷெட் அமைப்பதற்காக கட்டுமான பொருட்களை வைத்து இருந்தார். அப்போது செல்லமுருகுவும், தினேஷ்குமாரும் தங்களது சுவருக்கு சேதம் ஏற்படுத்தாமல் வேலை செய்யுங்கள் என்று கூறினர்

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது செல்லமுத்துவும், செல்லப்பாண்டியும் தகாத வார்த்தைகளால் திட்டி செல்லமுருகுவையும், தினேஷ்குமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வெள்ளைச்சாமி, அவரது உறவினர்கள் செல்லம், பிரகாஷ், அஜித் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

சாவு

இதைத்தொடர்ந்து செல்லமுருகுவும், தினேஷ்குமாரும் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே செல்லமுருகுவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மயக்கமடைந்தார். உடனே தினேஷ்குமார் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்லமுருகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

6 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தினேஷ்குமார் பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தை சாவில் மர்மம் உள்ளது என்றும், வெள்ளைச்சாமி தரப்பினர் தாக்கியதில் அவர் இறந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் வெள்ளைச்சாமி, அவரது மகன்கள் செல்லப்பாண்டி, செல்லமுத்து, உறவினர்கள் செல்லம், பிரகாஷ், அஜித் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com