லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மறியல்: போலீஸ் இன்ஸ்பெக்டரை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டதால் பரபரப்பு

லோயர்கேம்ப்- குமுளி மலைப்பாதையில் நடந்த மறியல் போராட்டத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரை சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மறியல்: போலீஸ் இன்ஸ்பெக்டரை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டதால் பரபரப்பு
Published on

கூடலூர்,

கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பெய்த மழை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாதாகோவில் அருகிலும், இரைச்சல் பாலம் மேல் வளைவு பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி மலைப்பாதையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழையினால் மீண்டும் அதே இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 23-ந் தேதி முதல் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டது. கேரளா செல்லும் பஸ்கள் லோயர்கேம்ப் வரை சென்று திரும்பி விடுகின்றன. மேலும் சாலை சீரமைப்பு பணிக்காக ஜல்லிகற்கள் மலைப்பாதையில் குவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கேரளா மாநிலத்துக்கு கூலிவேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் 6 கி.மீ. தூரம் நடந்து கூலி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பால் வியாபாரிகளும் கம்பம் மெட்டு வழியாக நீண்ட தூரம் சென்று பால் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதற்கட்டமாக பால் வியாபாரிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குமுளி மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கோரி நேற்று அதிகாலை 6 மணி அளவில் லோயர்கேம்ப்-குமுளி தேசிய நெடுஞ்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையின் குறுக்காக இரு சக்கர வாகனங்களை நிறுத்தி கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் இருந்து 12 தொலை தூர பஸ்கள் மற்றும் 2 தனியார் பள்ளி பஸ்கள் செல்லவிடாமல் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் கூட்டத்தில் ஒருவர் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அப்போது அவரை போலீசார் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை ஏன் பிடித்து செல்கிறீர்கள்? என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தேடி வந்தோம். தற்போது சிக்கி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப்பில் இருந்து அந்த நபர் தப்பியோட முயன்றார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் அவரை பிடிக்க முயன்றார்.

ஆனால் அந்த நபர், போலீஸ் இன்ஸ்பெக்டரை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதில் இன்ஸ்பெக்டர் சாக்கடை கால்வாயில் விழுந்தார். இதனால் அவருடைய சீருடை சேறும், சகதியுமாக மாறியது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி கூறும்போது, பொதுமக்களின் நலன்கருதி மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் போது ஏதேனும் விபத்து ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைதுறையினர், பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கூடி கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறினார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டரை சாக்கடை கால்வாயில் தள்ளி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அரசு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி பஸ்கள் விடுவிக்கப்பட்டது.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா ஆகியோர் லோயர்கேம்ப் பகுதிக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com