ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் : சபாநாயகர் செல்வம் பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் : சபாநாயகர் செல்வம் பேட்டி
Published on

புதுச்சேரி

புதுவை சட்டசபையில் சபாநாயகர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீதான குறைபாடுகள் தெரிவிக்கவே எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததின் பேரிலே கூட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக புதுவை தலைமை செயலர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஆகியோரை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூறிய புகார்கள் குறித்து விசாரித்தோம். மேலும் 2 அரசு செயலர்களும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதற்கான உரிய பதில் அளிக்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நாராயணசாமிக்கு எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமியின் நிலை என்ன? அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். நான் சபாநாயகர் பொறுப்பில் சரியாக செயல்பட்டு வருகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அரசின் முதல்-அமைச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சமையல் கியாஸ் மானியம் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கும், 6,700 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000-ம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.

காலதாமதம் காரணம் என்ன?

சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் கடந்த 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தால் முதல்-அமைச்சர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னரும் சந்திரபிரியங்கா தனது ராஜினாமா என்ற பெயரில் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சரிடம் மட்டுமின்றி ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக அனுப்பினார்.

கவர்னரின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்ட கடிதமும், சந்திரபிரியங்கா நேரடியாக அனுப்பிய ராஜினாமா கடிதமும் மத்திய அரசுக்கு சென்றது தான் பதவி நீக்கம் ஒப்புதலுக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதுபற்றி நானும் (சபாநாயகர்), கவர்னர் விளக்கம் அளித்தபின் தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நீங்கள் போட்டியிட உள்ளதா? தகவல் பரவுவதாக சபாநாயகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நல்ல சபாநாயகராக செயல்பட்டு வருகிறேன். கட்சியின் தலைமை என்ன ஒப்புதல் கொடுத்தாலும் அதனை செய்வேன்' என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com