எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயிறு விடுமுறை விடச்சொல்லி சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; விவசாயிகள்-வியாபாரிகள் ஏற்க மறுப்பதால் பரபரப்பு

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயிறு விடுமுறை விடச்சொல்லி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். விவசாயிகள்-வியாபாரிகள் அதை ஏற்க மறுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயிறு விடுமுறை விடச்சொல்லி சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; விவசாயிகள்-வியாபாரிகள் ஏற்க மறுப்பதால் பரபரப்பு
Published on

மொடக்குறிச்சி

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயிறு விடுமுறை விடச்சொல்லி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். விவசாயிகள்-வியாபாரிகள் அதை ஏற்க மறுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை கூடம்

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலமும், திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலமும் நடைபெற்று வருகிறது.

மேலும் நெல் கொள்முதல் நிலையமும் செயல்படுகிறது. இது தவிர மற்ற நாட்களில் விவசாய விளைபொருட்கள் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து விளை பொருட்களை விற்றும், வாங்கியும் செல்கிறார்கள்.

ஞாயிறு விடுமுறை வேண்டும்

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 70-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் வருகிற 2023-ம் ஆண்டு வரை இவர்களுக்கு மூட்டைக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும். அதனால் அன்றைய தினம் ஏலம் நடைபெற கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்கள்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இங்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளர் சாவித்திரியிடம் தெரிவித்தார்கள். அதுபற்றி சாவித்திரி விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள்.

வேலை நிறுத்தம்

இதையடுத்து சாவித்திரி மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி செய்ய மாட்டோம் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. எனினும் விளைபொருட்களை மூட்டையாக தைக்க தொழிலாளர்கள் வரவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா போலீசாருடன் அங்கு சென்றார். அதன்பின்னர் போலீசார் முன்னிலையில் விவசாயிகளே மூட்டைகளை தைத்து எடை போட்டார்கள்.

பரபரப்பு

இதையடுத்து வியாபாரிகளே மூட்டைகளை லாரியில் ஏற்றிச்செல்ல முடிவெடுத்தார்கள். இதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com