பொது வேலை நிறுத்தம் எதிரொலி; கரூரில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின

பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக கரூரில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

வேலை நிறுத்தம்

தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கொரோனா தொற்றில் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

வெறிச்சோடியது

இதனால் கரூரில் குறைந்த அளவிலான அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காலையில் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் திணறினார்கள். இதனால் கரூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஆங்காங்கே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் பஸ் நிலையம் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் திருப்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதியடைந்தனர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:- கரூர் மண்டலத்தில் மொத்தம் 260 பஸ்கள் இயங்குகின்றன. இதில் நேற்று 140 பஸ்கள் இயங்கின என தெரிவித்தார். இது 50 சதவீதம் ஆகும்.

கிருஷ்ணராயபுரம்

லாலாபேட்டையில் குறைவான பஸ்கள் இயங்கின. இதனால் காலையில் கரூர் மற்றும் திருச்சிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிடைத்த பஸ்களில் முண்டி அடித்து கொண்டு ஏறியும், படிக்கட்டுகள் நின்றவாறும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். சிலர் தனியார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வேலைக்கு சென்றனர். சிலர் பஸ்கள் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com