பருவமழையை பயன்படுத்தி சாகுபடி: தரமான சிறுதானிய விதைகளை பெறலாம்


பருவமழையை பயன்படுத்தி சாகுபடி: தரமான சிறுதானிய விதைகளை பெறலாம்
x

சிறுதானியங்களில் அதிக அளவில் சத்துக்கள் நிரம்பி இருப்பதால் தற்போது சந்தையில் சிறுதானியங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுதானியங்கள் பயிர் செய்யப்படுகின்றன. எனவே பருவமழைக்காலத்தில் சாகுபடி மூலம் தரமான சிறுதானிய விதைகளை பெறும் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்வது நல்லது.

தானிய ரகங்கள்

தமிழகத்தில் வரகு, பனிவரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை இறவையிலும், மானவாரியிலும் பயிரிடப்படுகின்றன.

வரகில் கோ-3, பனி வரகில் கோ-4, கோ-2, தினையில் கோ-6, கோ-7, சாமையில் கோ-3, பையூர்-1, பையூர்-2, குதிரைவாலியில் கோ-1 ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

குறுதானிய விதை உற்பத்திக்கு வரிசை விதைப்பிற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ விதையும், விதைக்கும் கருவி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ விதையும் போதுமானது. ஆனால், சாகுபடி செய்து விதை தயார் செய்வதற்கு வரிசை விதைப்பே சிறந்தது.

விதை நேர்த்தி

விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் என்ற பூசணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் மண் மற்றும் விதை சார்ந்த பூச்சி மற்றும் பூசண தாக்குதல் இன்றி விதைகள் நல்ல மகசூலை கொடுக்கும். பூசண கொல்லி விதை நேர்த்தி செய்து குறைந்தது ஒரு நாள் கழித்து 600 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து அதனுடன் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை கலந்து சுமார் 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும்.

அசோஸ்பைரில்லம் கலப்பதால் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. வறட்சி காலங்களில் 15 நாள் இடைவெளியில் ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவீத பி.பி.எம். இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

இந்த பயிர்களுக்கு தொழு உரம் மிகவும் எற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால் பயிரின் வளர்ச்சி கூடுதலாகி விதை முளைப்பு நன்கு இருக்கும். இதுதவிர, தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அந்தந்த பயிர்களுக்கு ஏற்றவாறு அளித்தல் வேண்டும்.

தேவையான தழைச்சத்தை மட்டும் முழுவதுமாக அடி உரமாக இடாமல் பிரித்து பயிரின் வெவ்வேறு வளர்ச்சி பருவத்தில் அளிக்க வேண்டும். விதை பயிர் உற்பத்திக்கான உரத் தேவை பொது பயிரை விட சற்று அதிகமாக இருக்கும். குறுந்தானியங்களுக்கு விதைப்பின்போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணூட்ட கலவை 12.5 கிலோவை அடி உரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20 முதல் 25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

நீர் நிர்வாகம்

மானாவாரி பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம் இல்லை. மழை பொழிவு தவறினால் ஒன்று அல்லது 2 முறை நீர் பாய்ச்சுதல் வேண்டும். சாமையில் பெரும்பாலும் நோய் தாக்குதல் இல்லை என்றாலும் சமயங்களில் குருத்து ஈ சாமையை தாக்கி அரிக்கின்றது. இந்த பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப் போடாமல் பருவ மழை தொடங்கிய உடன் விதைக்கலாம்.

பூச்சி மேலாண்மை

குதிரைவாலியில் கரிப்பட்டை நோய் என்ற பூஞ்சை காளான் நோய் தாக்குகிறது. இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடியை பிடுங்கி அப்புறப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

பயிர் வளர்ச்சியின் போது விதையில் இருந்து மாறுபட்ட களைச்செடிகள் என்னும் தான்தோன்றி பயிர்கள் மற்றும் நோய் தாக்குதல் உள்ள செடிகளை அகற்றி இனத்தூய்மை மேம்படுத்துதல் வேண்டும்.

வயல் தரம்

சிறுதானியங்களில் ஆதார விதை 0.05 என்ற அளவிலும், சான்று விதை 0.10 என்ற அளவிலும் இருக்க வேண்டும். விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவு செய்த பின் பூக்கும் தருணம், முதிர்ச்சி நிலை ஆகிய இரண்டு நிலைகளில் விதைச்சான்று அலுவலர் வயல் கண்காணிப்பு செய்து சான்று தருவார். விதை பயிரை சரியான தருணத்தில் முதிர்ச்சிக்கு வந்த பின்பே அறுவடை செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

வரகு 120 நாட்கள், பனிவரகு 65 முதல் 75 நாட்கள், தினை 80 -100, சாமை 80 - 85, குதிரைவாலி 75 - 90 என்ற நாட்கள் அளவில் அறுவடை செய்ய வேண்டும். விதைகளை சுத்தம் செய்தவுடன் 12 சதவீத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும். பின்னர் இந்த விதையை 13 மாதங்களுக்கு சேமிக்கலாம்.


Next Story