பூனையும், இனி மனித மொழி பேசும்...!


பூனையும், இனி மனித மொழி பேசும்...!
x

டெம்ப்டேஷன்ஸ் லேப் மற்றும் லண்டனில் உள்ள விளம்பர நிறுவனமான ஆடம் அண்ட் ஈவ்டிடிபி எனும் இரு நிறுவனங்கள் கைகோர்த்துத்தான் பூனை மொழியை, மனித குரலாக மாற்றிக்கொடுக்கும் முயற்சியை வெற்றிகரமாக்கி இருக்கிறார்கள்.

'மியாவ்', 'மி....யாவ்'.... இப்படி சின்ன மியாவ், நீளமான மியாவ் என பூனைகளின் மனநிலைக்கேற்ப மாறும் குரலை நமக்குப் புரியும்படி யாராவது மொழிபெயர்ப்பு செய்தால் எப்படியிருக்கும்? பூனைகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் உள்ள உறவை பாலும் காபியும் போல ஒன்று கலக்க வந்திருக்கிறது 'கேட் காலர் புரோடோடைப்' எனும் சாதனம்.

டெம்ப்டேஷன்ஸ் லேப் மற்றும் லண்டனில் உள்ள விளம்பர நிறுவனமான ஆடம் அண்ட் ஈவ்டிடிபி எனும் இரு நிறுவனங்கள் கைகோர்த்துத்தான் பூனை மொழியை, மனித குரலாக மாற்றிக்கொடுக்கும் முயற்சியை வெற்றிகரமாக்கி இருக்கிறார்கள். இதற்காக, பூனையின் கழுத்தில் 'கேட் காலர் புரோடோடைப்' கருவி பொருத்தப்படும். இதுதான், பூனை மொழியை உள்வாங்கி, அதற்கான அர்த்தத்தை மனித மொழியாக மாற்றிக் கொடுக்கிறது.

''பூனைகள் குறித்து நாங்கள் பெரும் ஆர்வம் கொண்டிருப்பதால்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூனையும், அதன் உரிமையாளர்களும் எளிதில் தொடர்புகொள்ளுமாறு கருவியினை உருவாக்கினோம்.

நாங்கள் செய்த ஆராய்ச்சிப்படி உருவாக்கிஇருக்கும் இந்த கருவியினைப் பயன்படுத்தி பூனைக்கும் உங்களுக்கும் உள்ள உறவை இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ள முடியும். இதற்காக, 3 ஆண்டுகளாக பல்வேறு பூனை காப்பகங்களில் சேமிக்கப்பட்ட குரல் பதிவுகளை ஆய்வு செய்து, அதற்கான அர்த்தங்களை கண்டறிந்திருக்கிறோம்'' என தெம்பாகப் பேசுகிறார் டெம்ப்டேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான பீட்டே சைமன்ஸ்.

அண்மையில் நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் 4 நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த '3-டி கேட்டர்பாக்ஸ்' கருவியில், பூனைகள் ெவளிப்படுத்தும் குரல்களுக்கு ஏற்ப முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் மனிதக்குரல்கள் ஒலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனோடு கிடைக்கும் 'ஆப்' பயன்படுத்தி, புளூடூத் வசதி மூலம் இக்கருவியில் ஒலிக்கும் மனிதக் குரலை (அதாவது, பூனையின் குரலை) உங்கள் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு நாட்டு உச்சரிப்புகளாகக்கூட மாற்றிக்கொள்ள முடியும்.

அறிவியலின் லாஜிக் பற்றிய கவலை இல்லாமல் இருந்தால் தாராளமாக உங்கள் செல்லக்குட்டியின் கழுத்தில் இக்கருவியினை மாட்டி அவற்றுடன் பேச முடியும்.


Next Story