தூக்கத்திலும் தூங்காது மூளை!

தூக்கத்திலும் தூங்காது மூளை!
Published on

மனிதர்கள் தூங்கும்போது கூட அவர்களின் மூளை விழிப்புடன் இயங்குகிறது. அதுமட்டுமின்றி, வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களையும் செய்யும் அளவுக்கு மனித மூளை, தூங்கும் பொழுதுகூட மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சிலரைத் தேர்வு செய்து, அவர்கள் விழித்திருக்கும்போது ஒரு கட்டளையைச் சொல்லி, அவர்களை ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி சொன்னார்கள்.

இதே செயல்களை அவர்கள் தூங்கும்போதும், அதே மாதிரி கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செய்தார்கள். இதன் முடிவில், மனிதர்கள் தூங்கும்போதும், அவர்களின் மூளை சிக்கலான அதே சமயம் தன்னிச்சையாக செய்யக்கூடிய செயல்களைச் செய்யும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் 'கரன்ட் பயாலஜி' என்கிற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

அப்படி என்ன கட்டளை அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது?

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் சில சொற்கள் பேசப்பட்டன. அந்த சொற்கள் குறிப்பிடுபவை விலங்குகளா அல்லது பொருட்களா என்று பிரித்தறிய வேண்டும். குறிப்பிட்ட சொல் விலங்குகளைக் குறிப்பதாக இருந்தால், அவர்கள் தங்களின் வலது பக்கத்தில் இருக்கும் பொத்தானை வலது கையால் அழுத்தவேண்டும். மாறாக, சொல்லப்படுவது ஏதேனும் ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லாக இருந்தால், இடது பக்கத்தில் இருக்கும் பொத்தானை இடது கையால் அழுத்தவேண்டும். இதுதான் சோதனை.

இந்த பரிசோதனையை அவர்கள் விழித்திருக்கும்போது ஆரம்பித்த ஆய்வாளர்கள், அவர்கள் இருளான அறைக்குள் உறங்கும்போதும் தொடர்ந்தனர். அவர்கள் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்ற பிறகும் கூட, இந்த வார்த்தை விளையாட்டு தொடர்ந்தது.

தூக்கத்தில் கூட தாங்கள் கேட்ட வார்த்தைகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடது கைகளில் இருக்கும் பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தியபடியே இருந்தனர். இந்த ஒட்டுமொத்த பரிசோதனையின்போதும், ஈ.ஈ.ஜி. என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் electroen cephalogram பயன்படுத்தி மூளையின் ஒட்டுமொத்த செயற்பாடும் பதிவு செய்யப்பட்டது.

சோதனை மனிதர்கள் தூங்கிய பிறகு அவர்களிடம் புதிய சொற்களைப் பயன்படுத்தியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும், அவர்களின் மூளை இந்த புதிய சொற்களையும் சரியாகத் தரம் பிரித்து, அதற்கேற்ற சரியான பொத்தான்களை அழுத்தச் செய்தது. ஒரே வித்தியாசம், இந்த புதிய சொற்களை தரம் பிரிப்பதற்கு மூளைக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பாரிஸைச் சேர்ந்த சித் கவ்தெர், ''இதுவரை நாம் நம்பியிருந்ததைவிட தூங்கும்போதும் மனிதர்களின் மூளை கூடுதல் விழிப்புடன் இருக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன'' என்கிறார்.

ஒருவர் தூங்கும்போதும் கூட அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்போது அவர் விழித்துக் கொள்வதும், கடிகாரத்தின் குறிப்பிட்ட அலார ஒலிக்கு ஒருவர் எழுந்துகொள்வதும் கூட இதே காரணத்தின் அடிப்படையில் நடக்கும் மூளையின் செயற்பாடுகளே என சொல்கிறார் அவர்.

ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்ற பிறகும் கூட, இந்த வார்த்தை விளையாட்டு தொடர்ந்தது. தூக்கத்தில் கூட தாங்கள் கேட்ட வார்த்தைகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடது கைகளில் இருக்கும் பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தியபடியே இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com