புதிய அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்

வயலூர் முருகன் கோவிலில் புதிய அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்
Published on

சோமரசம்பேட்டை, ஏப்.20-
வயலூர் முருகன் கோவிலில் புதிய அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய அர்ச்சகர்கள் நியமனம்
திருச்சி அருகே வயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆதி நாதர்-ஆதி நாயகி, பொய்யா கணபதி, முத்துக்குமாரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இங்கு 5 அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர், இவர்களில் 2 பேர் இந்து அறநிலையத்துறையால் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள், ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும், 2 பேர் சம்பளம் இன்றி 12 வருடங்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையால் புதிய அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரும் கோவிலில் அர்ச்சனை செய்ய முயன்றபோது, ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
போலீஸ் குவிப்பு
இதை அறிந்த இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் வயலூர் கோவிலுக்கு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் உத்தரவின் பேரில்தான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே பணியாற்றி வரும் நீங்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். புதியதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் கோவிலில் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com