மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிரான அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
Published on

திருச்சி, மார்ச்.29-
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிரான அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 அம்ச கோரிக்கைகள்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில்வே ஜங்ஷன் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் ரெயில் நிலைய வாசலில் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் 320 பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகளை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்று கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 3 தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதனிடையே ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு உணவு வழங்காததால் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.ஐ.சி.முகவர்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல் திருச்சி ஒத்தகடை சிக்னல் அருகே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ஜோன்ஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், பொது காப்பீட்டு கழக ஊழியர் சங்க மண்டல கிளை செயலாளர் ராஜமகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய கூடாது, வங்கிகளை தனியார் மயம் ஆக்கக் கூடாது, ரெயில்வே சேவைகளை தனியாருக்கு அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தா.பேட்டை
தா.பேட்டை கடைவீதியில் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.
துவரங்குறிச்சி
மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி பஸ் நிலையம் முன்பு நடராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை பெரியார் சிலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
லால்குடி-புள்ளம்பாடி
லால்குடி ரவுண்டானாவில் நடந்த மறியல் போராட்டத்துக்கு விவசாய தொழிற்சங்கத்தை சேர்ந்த சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 60 பேரை லால்குடி போலீசார் கைது செய்தனர்.
புள்ளம்பாடியில் வட்டாரத் தலைவர் ரஜினி தலைமையில் நடந்த போராட்டத்தில் 30 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில்வே தொழிற்சங்கத்தினர்
பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோட்டத் தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் பஸ்நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நவல்பட்டு அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை யில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர. இதில் 3 பெண்கள் உள்பட 99 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சமயபுரம் நால் ரோட்டில் நடந்த மறியலில் 30 பேர் கலந்து கொண்டனர்.
துறையூர்-காட்டுப்புத்தூர்
துறையூரில் தொ.மு.ச தலைவர் சுப்பையா தலைமையில் நடந்த போராட்டத்தில் 3 பெண்கள் உள்பட 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்புத்தூரில் நடந்த விவசாய தொழிலாளர் சங்க மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை-உப்பிலியபுரம்
மணப்பாறை பஸ்நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தில் 207 பேர் கைது செய்யப்பட்டனர். வையம்பட்டி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்ட 44 பேர் கது செய்யப்பட்டனர்.
உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே நடந்த மறியல் போராட்டத்தில் 77 பெண்களும், 45 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
முசிறி-தொட்டியம்
முசிறி கைகாட்டியில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 41 பேரை முசிறி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தொட்டியத்தில் நடைபெற்ற மறியலில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com