சக்கரங்கள் இல்லாமல் இயங்கும் ரெயில்


சக்கரங்கள் இல்லாமல் இயங்கும் ரெயில்
x

சக்கரங்கள் இல்லாமல் காந்தப்புலத்தின் அதீத சக்தியினால் இயங்கும் ரெயிலானது பல ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ளது. இந்த ரெயிலின் பெயர் ‘மேக்லெவ் ரெயில்’.

சக்கரங்களோடு நகரும் ரெயிலை பார்த்திருப்போம். ஆனால் சக்கரங்கள் இல்லாமல் காந்தப்புலத்தின் அதீத சக்தியினால் இயங்கும் ரெயிலானது பல ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ளது. இந்த ரெயிலின் பெயர் 'மேக்லெவ் ரெயில்'. மேக்லெவ் என்பது மேக்னடிக் லெவிடேசன் என்பதன் சுருக்கமாகும். லெவிட்டேசன் என்பதன் பொருள் எந்தவித துணையும் இல்லாமல் காற்றில் மிதத்தல் என்பதாகும்.

சாதாரண காந்தங்களை போலவே இந்த மின் காந்தங்களின் எதிர் துருவங்களை அருகே கொண்டு செல்லும்போது ஒன்றையொன்று எதிர்க்கும். இதில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழே 450 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக குளிர்விக்கப்படும்போது அவை சாதாரண மின் காந்தங்களை விட பத்து மடங்கு அதிக வலிமையான மின்காந்தப்புலங்களை உருவாக்குகின்றன.

மாக்லேவ் ரெயிலுக்கும் வழக்கமான ரெயிலுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், மாக்லேவ் ரெயில்களில் என்ஜின், சக்கரங்கள் இல்லை. பராமரிப்பு செலவு, உராய்வு குறைவு. இந்த அமைப்பில், இரண்டு வகையான காந்தங்கள் உள்ளன. ஒரு காந்தம் ரெயிலை பாதையில் நிலைநிறுத்தவும், மற்றொன்று ரெயிலை முன்னோக்கி நகர்த்தவும் பயன்படுகின்றன. காந்தமாக்கப்பட்ட சுருள்கள் தண்டவாளத்தில் பொருத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் சுருள்களில் மின்னோட்டம் செல்லும் போது, ரெயிலின் கீழ்ப்பெட்டிக்கும், தண்டவாளத்திற்கும் இடையே ஒரு பொதுவான காந்தப்புலம் உருவாகின்றன. இந்த காந்தப்புலம் ரெயிலை அதிக வேகமாக இயங்க வைக்கின்றன.

ஒரு ரெயில் பெட்டியில் நான்கு மூலைகளிலும் காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். சக்கரங்கள் இல்லாத ரெயில், தண்டவாளத்தின் மேலே மிதந்து, தண்டவாளத்தை தொடாமல் சீராகச் செல்கிறது. ஜேம்ஸ் பவல் மற்றும் ப்ரூக்ஹேவனின் கோர்டன் டான்பி ஆகியோர் 1960-ம் ஆண்டு காந்தத்தால் உருவாக்கப்பட்ட ரெயில் வடிவமைப்பிற்கான முதல் காப்புரிமையைப் பெற்றனர். வணிக ரீதியிலான முதல் அதிவேக மேக்லேவ் ரெயில் 2004-ம் ஆண்டு ஷாங்காயில் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

தற்போது சீனா, மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன மின்காந்த ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரெயிலானது மற்ற ரெயிலை விட மிகக் குறைவான சத்தமும், அதிர்வும் கொண்டிருக்கும். ஆனால் இந்த வகை ரெயில்கள் தயாரிக்க அதிக செலவாகும். ஏனெனில் இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் காந்த சுருள்கள் மற்றும் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை.


Next Story