வெப்பமயமான உப்பு தேசம்..!


வெப்பமயமான உப்பு தேசம்..!
x

உப்பு தேசம், வெப்ப தேசம், உலகின் மிகவும் மோசமான இடம்... இப்படித்தான் அழைக்கப்படுகிறது, ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டனாகில் தாழ்வுப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் தாழ்வாக இருக்கும் பகுதி இது. பூமியின் கண்டத்தட்டுகள் முட்டிக் கொண்டு நகர்கின்ற பிரதேசம் என்பதால் இங்கு எரிமலைகள் அதிகம். இரண்டு கண்டத்தட்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 1 முதல் 2 செ.மீ தூரம் இங்கு விலகிச் செல்வதால், இன்னும் ஒரு கோடி ஆண்டுகளில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைந்து விடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அபார் பழங்குடி மக்கள்

இந்த டனாகில் பகுதியில் பூமிக்கு அடியிலிருந்து உப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. கந்தகமும் கலந்து மஞ்சள் நிறமாகக் காட்சிதரும் இந்தப்பகுதியில் வெயில் தகிக்கிறது. சராசரியாக 34.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சில சமயங்களில் 60 டிகிரி வரை போய்விடும். எஸ்கிமோக்கள் இங்கு வந்தால் வத்தலாகி செத்துப் போவார்கள். காற்று ஏதோ ஹேர் டிரையரில் வரும் வெப்பக் காற்று போல முகத்தில் அறையும்.


உப்புக் கற்கள்

இங்கு வாழும் அபார் பழங்குடி மக்கள், இந்த உப்பை வெட்டி எடுத்து விற்று பிழைக்கிறார்கள். பெரிய கோடரிகளால் பாளம் பாளமாக உப்பை வெட்டுகிறார்கள். சதுரமாக 4 கிலோ சைஸில் செங்கல் போல உப்பை செதுக்கி எடுக்கிறார்கள். இப்படி எடுக்கப்படும் உப்பு, ஒட்டகங்கள் மற்றும் கழுதைகளின் முதுகில் ஏற்றப்பட்டு பக்கத்து நகருக்குக் கொண்டு சென்று விற்கப்படுகிறது. வருடத்துக்கு இப்படி 13 லட்சம் டன் உப்பு வெட்டுகிறார்கள். இந்த உப்பை அள்ளும் தொழிலாளிகளைத் தவிர, மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம் இது.

இந்த உப்புக் கற்கள் ஒருகாலத்தில் சோமாலியாவில் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டன. 'வெள்ளைத் தங்கம்' எனப்பட்டது இது. ஒருமுறை இப்படி பயணித்து உப்பு வெட்டி எடுத்து வர 3 நாட்கள் ஆகும். ஒரு ஒட்டக லோடு உப்பை 500 ரூபாய்க்கு விற்க முடியும். வாழ்க்கையை ஓட்ட மக்கள் என்னவெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டிஇருக்கிறது..!


Next Story