களியக்காவிளை அருகே பள்ளி கலைநிகழ்ச்சியில் மாணவர்கள்– போலீஸ் மோதல் ஏட்டு மண்டை உடைப்பு

களியக்காவிளை அருகே பள்ளி கலை நிகழ்ச்சியில் மாணவர்கள்–போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏட்டின் மண்டை உடைந்தது.
களியக்காவிளை அருகே பள்ளி கலைநிகழ்ச்சியில் மாணவர்கள்– போலீஸ் மோதல் ஏட்டு மண்டை உடைப்பு
Published on

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள பளுகல் கூனம்பனை பகுதியில் கேரள எல்லையையொட்டி ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 75வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 2ந்தேதி முதல் தினமும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானம் தமிழக எல்லைக்குள் வருவதால் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பளுகல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நித்திரவிளையை சேர்ந்த கணேஷ்குமார்(வயது 40) தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளியில் நேற்று முன்தினம் இரவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியை கடந்தும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பள்ளியின் நிர்வாகிகளை சந்தித்து இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. எனவே உடனடியாக நிகழ்ச்சியை முடிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினர்.

அப்போது, அங்கு நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி திடீரென மோதலாக மாறியது. அப்போது, போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.மேலும் ஏட்டு கணேஷ்குமார் மைதானத்தில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்து ஏட்டு மீது கற்கள் வீசப்பட்டன. இதில் ஏட்டு கணேஷ்குமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பள்ளி கலைநிகழ்ச்சியில் நடந்த மோதலில் ஏட்டுவின் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com