

காரைக்கால்
அரசு கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்ட காரைக்கால் கலெக்டர், மாணவர்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
கலெக்டர் திடீர் அய்வு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கையில் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், குறித்த நேரத்திற்குள் வராத ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கும்படி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர், அங்கு நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வினையும் அவர் பார்வையிட்டார்.
தரமான உணவு
இதனை தொடர்ந்து அருகில் உள்ள பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள். மேலும் அங்கு 650 மாணவ-மாணவிகள் தங்கி சாப்பிடும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது, சமையல் கூட நிர்வாகியிடம் மாணவர்களுக்கான உணவு, குடிநீரை தரமாக வழங்கவேண்டும். உணவுக்கூடத்தை தினந்தோறும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் தங்கும் அறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.