ஜிப்மர் ஆஸ்பத்திரியில் திடீர் தீ

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று திடீரென தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் திடீர் தீ
Published on

புதுச்சேரி

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று திடீரென தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உயர்தர சிகிச்சை

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். 1000-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் முதல் தளத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பியல் துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறையின் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பு

இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் ஏ.சி. எந்திரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இதைப்பார்த்த உடன் அங்கு இருந்த டாக்டர்கள், நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து அங்குள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து ஏ.சி. எந்திரத்தின் மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். அதன்பின் ரசாயன கலவையை தெளித்து தீயை அணைத்தனர். அதன்பிறகே ஆஸ்பத்திரி வளாகத்தில் இயல்பு நிலை திரும்பியது. சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் டாக்டர்கள் அங்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

திடீர் தீ விபத்தால் ஜிப்மர் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com