

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் மேகம் திரண்டு மழை பெய்யும் சூழல் உருவானது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் சுமார் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. பின்னர் சுமார் 3 மணி நேரம் லேசான மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் குறைந்தது. தற்போது பெய்த மழையால் கடலை அறுவடை செய்யும் சூழலில் உள்ள விவசாயிகள் கடலை அறுவடை செய்ய தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் மழை பெய்ததால் தற்போது பூவும் பிஞ்சுமாக உள்ள சூழ்நிலையில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதுபோல் எள் விதைத்து உள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில் மழை பெய்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.