சத்தமாக ஒலி எழுப்புவதில் சாதனை...!


சத்தமாக ஒலி எழுப்புவதில் சாதனை...!
x

அதிக ஒலி எழுப்பியதற்காக அமெரிக்க பெண் உலக சாதனை படைத்துள்ளார்

மற்றவர்களை விட அசாதாரணமான பழக்கம் ஒருவரிடம் இருந்தால் அது தனி கவனம் பெறும். அதுவே அவருடைய தனித்திறமையாக மாறி புது அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். சத்தமாக பேசும் குரல் வளம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ரெயில், பஸ், இருசக்கர வாகனம் உள்பட பல்வேறு சாதனங்கள், உயிரினங்கள் எழுப்பும் சத்தத்தை தங்கள் குரல் வளத்தை பயன்படுத்தி தத்ரூபமாக எழுப்பி அசத்துவார்கள். அப்படி அதிக ஒலி எழுப்பியதற்காக அமெரிக்க பெண் உலக சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் கிம்பர்லி. இவர் எழுப்பிய ஒலி 107.3 டெசிபல்லை எட்டியது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த எலிசா காக்னோனி 107 டெசிபெல் ஒலி எழுப்பியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதனை இப்போது கிம்பர்லி முறியடித்திருக்கிறார். ஆண்களை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் நெவில் ஷார்ப் அதிக ஒலி எழுப்பிய சாதனையாளராக விளங்குகிறார். 2021-ம் ஆண்டில் இவர் எழுப்பிய ஒலியின் வீரியம் 112.7 டெசிபல்லை எட்டியது.

கிம்பர்லி எழுப்பிய ஒலி சுவர்களில் துளை போடும் டிரில்லிங் மெஷின் (90-95 டெசிபல்), சில இரு சக்கர வாகனங்களின் (100-110 டெசிபல்) சத்தத்தை விட அதிகமாக இருப்பதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த சாதனையை படைப்பதற்கு கிம்பர்லி எந்தவொரு சத்தமும் இல்லாத அமைதியான இடத்தை தேடிப்பிடிக்க வேண்டி இருந்தது. ஒலிப்பதிவு ஸ்டூடியோவில் தனது ஒலி அளவை பதிவு செய்ய முடிவு செய்தார். இறுதியில் அங்குள்ள பிரபலமான வானொலி நிலையத்தின் ஸ்டூடியோவில் ஒலியை பதிவு செய்தார். அந்த வானொலி நிலையம் 'எலியட் இன் தி மார்னிங்' நிகழ்ச்சியில் நேரலையாக கிம்பரிலியின் சப்தத்தை ஒலிக்க விட்டு சாதனையில் இடம்பெற செய்துவிட்டது.

கிம்பர்லிக்கு குழந்தை பருவத்தில் இருந்தே அசாதாரணமாக ஒலி எழுப்பும் ஆற்றல் இருந்திருக்கிறது. ஆனால் அதனை யாரும் பாராட்டவில்லை. அதனை கிம்பர்லியும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் டிக்டாக், யூடியூப் மூலம் தனது குரல் வளத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது குரலை பலரும் பாராட்ட, சாதனை முயற்சியில் களம் இறங்கி சாதித்துவிட்டார்.


Next Story