சணல் பொருட்களில் உருவாகும் கலைப்பொக்கிஷங்கள்..!


சணல் பொருட்களில் உருவாகும் கலைப்பொக்கிஷங்கள்..!
x

சணலில் பல்வேறு கலை பொருள்களை உருவாக்கி அசத்தி வருகிறார் அகிலாண்டேஸ்வரி .

பணப்பயிர்களில் ஒன்றான சணல் நாரைக்கொண்டு கலைநயமான பொருட்களை செய்து அசத்துகிறார், அகிலாண்டேஸ்வரி. சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், புதுமையான விஷயங்களை முயன்று பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்குள் சிறுவயதிலேயே துளிர்விட்ட கலை ஆர்வம், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்போதும் தொடர்கிறது. அதனால்தான், பி.சி.ஏ. மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் கூட, கலை சம்பந்தமான பேஷன் துறையிலேயே பயணிக்கிறார். சணல் என்பதை வெறும் சாக்கு மூட்டைகளாக மட்டுமே பார்க்கும் பலருக்கு மத்தியில், அதே சணல் நாரில் புதுமையான பொம்மைகளும், பயனுள்ள பொருட்களும் உருவாக்கலாம் என்பதை செய்து காண்பித்த அகிலாண்டேஸ்வரி, அதுபற்றி பகிர்ந்து கொள்கிறார்.

* கலை பொருட்கள் மீதான ஆர்வத்தை எப்போது உணர்ந்தீர்கள்?

என் பாட்டி மூலமாகவே, கலை ஆர்வம் எனக்குள் தொற்றிக்கொண்டது. அவர் கலைப்பொருட்களை மிகவும் நேர்த்தியாக உருவாக்குவார். அனுபவ அறிவு மட்டுமே இருந்தாலும், அதை கொண்டு புதிதாக சிந்திப்பார். வீட்டு விசேஷங்களின்போது, பாட்டி வடிவமைத்த உடைகளை அணிந்துகொள்வதுதான், வழக்கமாக இருக்கும். உடை தைப்பது, கூடை மற்றும் ஸ்வெட்டர் பின்னுவது, ஸ்வெட்டர் நூலில் பொம்மைகள் செய்வது... என அசத்துவார். மேலும் வீணான பொருட்களில், சிறுசிறு மாற்றங்களை செய்து அதை மற்றொரு புது பொருளாக உருவாக்கும் யுக்தி அவரிடம் அதிகமாகவே உண்டு. அதன் அடிப்படையில்தான், நானும் கலை பொருட்களை உருவாக்க ஆரம்பித்தேன்.

* நீங்கள் எத்தகைய கலை பொருட்களை உருவாக்குவீர்கள்?

ஓவியம் வரைதல், ஆரி வேலைப்பாடுகள் செய்தல்... இத்தகைய வழக்கமான கலை வடிவங்களை தாண்டி, நிறைய புதுமையான விஷயங்களை முயன்றிருக்கிறேன். உல்லன் நூலிழையில் நூல் ஓவியம் உருவாக்குவது, மென்மையான பொம்மைகளை தயாரிப்பது, வீணான பிளாஸ்டிக் பொருட்களில் சிற்பம் செய்வது, களிமண் ஆபரணங்கள் உருவாக்குவது... என நிறைய கலை வடிவங்களை முயன்றிருக்கிறேன். இதில், சணல் நாரில் தயாராகும் கலைப்பொருட்கள், ரொம்ப ஸ்பெஷல்.

* சணல் நாரில் கலைப்பொருட்களை உருவாக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?

வீணான பொருட்களில் கலை பொருட்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகவே இதை முன்னெடுத்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட, சிறப்பான கலை வடிவங்கள் கிடைத்தன. நினைத்த வடிவில், 'கிரியேட்டி'வான உருவங்களை உருவாக்க முடிந்ததால், சணல் நாரில் நிறைய கலைப்பொருட்களை செய்தேன். குறிப்பாக பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள், பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பர்ஸ், கீ செயின் ஆகியவற்றை சணல் நாரில் உருவாக்கினேன். இவற்றோடு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களையும் சணல் நாரில் தயாரித்திருக்கிறேன். தண்ணீர் பாட்டில் பை, சாப்பாடு எடுத்து செல்லும் பை, மொபைல் கவர், மொபைல் போன்களை சார்ஜிங் செய்யும்போது தொங்கவிடப்படும் பை, மளிகை பொருட்களை வாங்கி வரக்கூடிய கூடை வடிவிலான சணல் பை... என நிறைய தயாரித்திருக்கிறேன்.

* சணல் நாரில் புதுமைகளை படைக்கும் நீங்கள் இதற்கென பிரத்யேக பயிற்சி பெற்றிருக்கிறீர்களா?

இல்லை. எனக்குள் இருக்கும் கலை ஆர்வம்தான், புதுமையான கலை வடிவங்களை உருவாக்க, வழிவகுக்கிறது.

* சணல் நாரில் நிறைய கலைப்பொருட்களை உருவாக்குகிறீர்கள். அதற்கு வரவேற்பு இருக்கிறதா?

அதிகப்படியான வரவேற்பு இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு சிறந்த மாற்றாக சணல் பொருட்கள் உள்ளதால் சணல் பொம்மைகளுக்கும், மற்ற சணல் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பெரும்பாலும், பள்ளி-அலுவலகம் செல்பவர்கள்,சணல் நார் பைகளையே அதிகம் உபயோகிக்கிறார்கள்.

* சணல் பொருட்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்குமா?

நிச்சயமாக இருக்கும். சணல் நாருக்கும், சணலில் தயாரான பொருட்களுக்கும் 'காலாவதி' என்பதே கிடையாது. அதனால் சணல் கலைபொருட்கள் தயாரிப்பிலும், அதுசம்பந்தமான தொழில் முயற்சியிலும் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளும், சணல் பொருள் உபயோகத்தை அதிகரித்துவிடும். இதுபோன்ற பாசிட்டிவான காரணங்களால், நிறைய பெண்கள் இப்போது சணல் சம்பந்தமான தொழில் பயிற்சி பெறுகிறார்கள். அந்தவகையில், நானும் நிறைய பெண்களுக்கு சணல் பொருள் தயாரிப்பு குறித்த பயிற்சிகளை வழங்கி இருக்கிறேன். குடும்ப தலைவிகளும் வீட்டில் இருந்தபடியே, சணல் தயாரிப்புகளை சிறுதொழிலாக முன்னெடுக்கிறார்கள்.

* சணல் தயாரிப்புகளை, மத்திய-மாநில அரசுகள் ஊக்குவிக்கிறதா?

சணல் தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் நிறைய கண்காட்சிகளை ஒருங்கிணைத்திருக்கின்றன. அந்த கண்காட்சிகளில், சணல் தயாரிப்புகளே முக்கிய அங்கம் வகிக்கும். நமக்கு தெரிந்த சணல் பொருட்களை விட, அங்கு புதுமையான பல சணல் பொருட்களையும் பார்க்கமுடியும்.

* கலை முயற்சிகளில் வேறு எதுவும் புதுமை புகுத்தியிருக்கிறீர்களா?

சணல் படைப்புகளுக்கு அடுத்தபடியாக, ஆடை வடிவமைப்பு மற்றும் நவீன ஆடை தயாரிப்புகளில் ஆர்வமாக இருக்கிறேன்.இன்றைய பெண்கள் நவீன காலத்திற்கு ஏற்ப நேரத்தை வீணாக்காமல் சுலபமாக புடவை கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். 9 கஜம், 10 கஜம் கட்டி வந்த பெண்கள், காலப்போக்கிற்கு ஏற்ப நீளத்தை குறைத்துக்கொண்டாலும், புடவை மீதான பிரியத்தை குறைத்துக் கொள்ளவில்லை. அந்தவகையில் கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்ப ரெடிமேட் சேலைகளை உருவாக்கி வருகிறேன். சாதாரண புடவைகளில் தொடங்கி, மடிசார், பஞ்சகஜம், மராட்டி, குஜராத்தி, பாவாடை தாவணி என எல்லாவற்றையும் ரெடிமேட் புடவைகளாக மாற்றியிருக்கிறேன். அதேபோல நவராத்திரி காலங்களில் வீட்டில் அமைக்கும் கொலு மேடைகளுக்கும் புதுமையான கவர் உருவாக்கும் பணிகளை முன்னெடுக்கிறேன்.


Next Story