இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ


இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ
x

தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.

தேங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பொருளாக விளங்குகிறது. இளநீராக, தேங்காய் துருவலாக, எண்ணெய்யாக, அலங்கார கலைப்பொருட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தேங்காயின் உட்பகுதியில் முளைக்கும் தேங்காய்ப் பூவையும் உட்கொள்ளலாம். தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. இளநீரில் இருப்பதை விட இதில் அதிக சத்துக்கள் உள்ளடங்கி இருக்கும். தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய்ப் பூவாக மாறுகிறது. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

செரிமானம்: செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கும் தன்மை தேங்காய்ப் பூவுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அசிடிட்டி, இரப்பை அழற்சி போன்ற செரிமானம் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் தன்மையும் தேங்காய்ப் பூவுக்கு உண்டு.

நீரேற்றம்: தேங்காய்ப் பூவில் காணப்படும் ஜெலட்டினஸ் என்னும் பொருள் நீரேற்றம் கொண்டது. எலக்ட்ரோலைட்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும். இயற்கையாகவே நீரேற்றத்தை தக்கவைத்து உடலுக்கு புத்துணர்ச்சியூட்டக்கூடியது.

ஊட்டச்சத்து: தேங்காய்ப்பூவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனை உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நலம் சேர்க்கும்.

குளிர்ச்சி: தேங்காய்ப் பூ குளிர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை சமநிலைப்படுத்தி குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டது. வெப்பமான காலநிலையில் உடலில் வெளிப்படும் மாறுபாடுகளை சமநிலைப்படுத்துவதற்கு தேங்காய்ப்பூ சாப்பிடுவது அவசியமானது.

உடல் ஆற்றல்: தேங்காய்ப் பூவில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்குவதற்கு உதவும். சோர்வில் இருந்து மீட்டெடுக்க வழிவகை செய்யும் சிறந்த சிற்றுண்டியாகவும் தேங்காய்ப்பூ விளங்குகிறது.

நார்ச்சத்து: தேங்காய்ப் பூவில் நீர்ச்சத்தைபோலவே நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அது செரிமான செயல்பாடுகளை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடலில் தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சேரும் கெட்டக்கொழுப்பை கரைக்கவும் தேங்காய்ப்பூ உதவும்.

இளமை: உடலில் உள்ள செல்களை புதுப்பிக்க தூண்டுவதால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றங்களுக்கு பிறகு செல்களில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் உடலில் தங்கினால் பிரீ ரேடிக்கல் பிரச்சினை வரலாம். அதனால் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்பட்டு விரைவாகவே வயதான தோற்றம் எட்டிப்பார்க்க தொடங்கும். தேங்காய்ப்பூ சாப்பிட்டு வந்தால் செல்கள் புத்துணர்சி பெறும். குறிப்பாக செல்கள் சிதைவடையாமல் பிரீ ரேடிக்கல்கள் வெளியேறுவதற்கு வித்திடும். அதன் மூலம் இளமையை தக்கவைப்பதற்கும் துணைபுரியும். மேலும் தேங்காய்ப்பூவில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவை பிரகாசப்படுத்த வழிவகுக்கும்.

நீரிழிவு: தேங்காய்ப் பூவை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவி புரியும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் ஏற்படும் சோர்வை தடுக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி சாப்பிட்ட திருப்தியை அளிக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். கணையத்தில் இன்சுலினை அதிகமாக சுரக்க செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

தேங்காய்ப்பூ சாப்பிடும் முன்பு அது தரமானதாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தேங்காய்ப்பூவின் வெளிப்பகுதி மிருதுவாக இருக்க வேண்டும். துர்நாற்றமோ, கெட்டுப்போன, அழுகிப்போன அறிகுறியோ தென்பட்டால் அதனை தவிர்த்துவிட வேண்டும். ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு உண்ண வேண்டும். மேலும் தேங்காய்ப்பூ ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உண்ண வேண்டும். அதில் இயற்கை சர்க்கரைகளும், கலோரிகளும் இருக்கின்றன. அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் அதிக கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.


Next Story