இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம்


இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம்
x

ஆண்களுக்கு இணையாக பஸ்சை ஓட்டி பயணிகள், சக பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஸ்கூட்டர், கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டினாலும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக பெண்கள் இயக்கும் நிலை உள்ளது. அதற்கு கூடுதல் நேர பணிச் சுமை, உடல் சோர்வு, இரவு நேர பணி உள்ளிட்ட சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக பணியில் சேர்ந்து அந்த குறையை பொய் என கூறும் வகையில் மெய்ப்பித்து காட்டியவர், வசந்தகுமாரி. ஆண்களுக்கு இணையாக பஸ்சை ஓட்டி பயணிகள், சக பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்றார்.

24 ஆண்டுகள் பஸ் டிரைவராக பணியாற்றியவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வின் போதும் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரரானார். அதாவது பணிக்காலத்தில் காயம் ஏற்படும் வகையில் எந்தவொரு விபத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. எப்படியோ பணியில் சேர்ந்தோம், ஓய்வு பெற்றோம் என இருக்காமல் அர்ப்பணிப்போடு அனைத்து தரப்பினரும் மெச்சத்தகுந்த வகையில் பஸ் டிரைவரின் பணியை முடித்தார். தற்போது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதன் மூலம் ஓய்வு காலத்தில் மேலும் ஒரு மகுடம் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் வசந்தகுமாரி

இந்த சாதனை தொடர்பாக குமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் வசித்து வரும் வசந்தகுமாரியை சந்தித்து பேசினோம். அவருடைய கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை மனம் திறந்தார். அதில் சந்தித்த சோதனைகள் தான் ஏராளம். அதுவே சாதிப்பதற்கு உந்துதலாக, ஒவ்வொரு இருண்ட காலத்தையும் கடந்து வாழ்க்கையை சுடரொளியாக மாற்றி வசந்தகாலத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. அதனை அவரே சொல்ல கேட்போம்.

''1¼ வயதில் தன்னுடைய தாய் ராஜம்மாளை இழந்தேன். தந்தை வேறொருவரை 2-வதாக மணந்தார். பிறகு பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். அவர் இறந்ததும் எனக்கு தாயை போல் இருந்து பாதுகாத்தவர் மூத்த தாய்மாமாவின் மகள் தங்கம். தாய் வழி குடும்பத்தினர் தான் திருமணத்துக்கு முன்பு வரை என்னை பார்த்துக் கொண்டனர்.

14 வயதிலேயே கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். பெரியப்பாவின் மகன் கார் வைத்திருந்தார். அந்த காரை அவ்வப்போது ஆசையாக ஓட்டி பயிற்சி பெற்றேன். அது தான் என்னுடைய குடும்பத்தை பின்னால் காப்பாற்றப் போகிறது என்பது அப்போது தெரியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக 19 வயதில் அவசர, அவசரமாக எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மாப்பிள்ளை, 4 பெண் குழந்தைகளின் தந்தை. அவருக்கு வயது 39.

நான் தான் தாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அதுபோன்ற கடினமான சூழ்நிலை அந்த 4 பெண் குழந்தைகளுக்கும் நடக்கக்கூடாது, தாயாக இருந்து அவர்களின் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சமாக, பக்கபலமாக இருக்க முடிவு செய்து மனதை திடப்படுத்தி இந்த திருமண பந்தத்தை சந்தோசமாக ஏற்றுக் கொண்டேன்.

எனது கணவர் செபாஸ்டின் கொத்தனார் வேலைக்குச் சென்று வந்தார். ஒரு கட்டத்தில் எனக்கும் 2 குழந்தைகள் பிறந்தன. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்'' என்றவர் பஸ் டிரைவராக வாழ்க்கையை தொடங்கியபோது நடந்த சம்பவங்களை விவரிக்கிறார்.

பெண்கள் வர தயங்கிய பஸ் டிரைவர் பணி சுலபமாக கிடைத்ததா?

முதல் 19 வருட வாழ்க்கை ஒரு ரகம், அடுத்த 15 வருடம் குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை என 34 வருடம் கழிந்தது. இந்த வாழ்க்கை பாடம் ஒரு அனுபவத்தை கொடுத்து என்னை பக்குவப்படுத்தியது. சோதனைகளை தகர்த்து சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. எனக்கு கார் ஓட்ட தெரியும் என்பதால், நாம் ஏன் பஸ் டிரைவர் பணிக்கு செல்லக்கூடாது என்ற எண்ணம் உதயமானது. என்னை தயார்படுத்த கனரக வாகனம் ஓட்டி, ஓட்டுனர் உரிமம் எடுக்க பயிற்சியில் இறங்கினேன். அது சாத்தியமாயிற்று. ஓட்டுனர் உரிமத்துடன் பஸ் டிரைவர் பணியை பெற களத்தில் குதித்த போது சோதனைகளும், அலட்சியமான வார்த்தைகளும் என்னை பின் தொடர்ந்து தாக்கின. பணிக்கான தேர்வில் உயரம் சரியாக இருந்தும் குறைவாக இருக்கிறது என கூறி என்னை முதலில் அனுப்பி விட்டனர்.

அனைத்து தகுதி இருந்தும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக வேலை தர மறுக்கிறார்களே? என்ற ஆதங்கம் மனதை வெகுவாக காயப்படுத்தியது. எனினும் என்னுடைய போராட்டம் தொடர்ந்தது. 1990-ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த ஆட்சி காலத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது. ஆனால் அந்த சமயத்தில் திடீரென அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. என்னுடைய நம்பிக்கையும் கலைந்தது. இருப்பினும் நான் துவண்டு விடவில்லை. ஒரு கட்டத்தில் அரசியல் தலைவர்கள் மூலம் என்னுடைய ஆர்வம் பற்றி அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அந்த கோரிக்கை மனுவை கனிவுடன் பரிசீலித்து 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது நான் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை. பணியில் சேர்ந்த போது எனக்கு வயது 34. இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையும் கிடைத்தது.

பணியில் சேர்ந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஆண் பார்க்க வேண்டிய வேலையை பெண்ணுக்கு கொடுத்திட்டாங்க, இந்த பெண்ணுக்கு பஸ்சை ஓட்டத் தெரியுமா? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு இருந்தது. எனினும் பஸ் மூலம் எட்டு போடச் சொன்னார்கள். இதற்கான ஏற்பாடு பணிமனையில் செய்யப்பட்டிருந்தது.

முதல் பெண் பஸ் டிரைவர் என்பதால், நான் பஸ் ஓட்டுவதை பார்க்க அங்கு பெருங்கூட்டமே திரண்டிருந்தது. பஸ்சை ஓட்டத் தொடங்கியதும் அதிகாரிகள் ஓடி ஒளியத் தொடங்கினர். ஏனென்றால் ஓட்டத் தெரியாமல் அவர்களை இடித்து விடுவேன் என்ற மனநிலை. ஆனால் அந்த நிலையை உடைத்தெறியும் வகையில் பஸ் மூலம் எட்டு போட்டேன். இதனை பார்த்த பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

முதலில் நாகர்கோவில்-புத்தேரி நகரப் பகுதியில் பஸ் ஓட்டினேன். அது தான் எனது முதல் பணி. பிறகு நாகர்கோவில்-திருவனந்தபுரம், நாகர்கோவில்-திருநெல்வேலி, திருநெல்வேலி-தூத்துக்குடி வழித்தடத்தில் பஸ் ஓட்டினேன். இதில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தான் 10 வருடங்களுக்கு மேல் பஸ்சை இயக்கியுள்ளேன். பணியின் போது பயணிகளும், சக ஊழியர்களும் எனக்கு தந்த வரவேற்பு மெய்சிலிர்ப்பையும், ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்தது. ஆண்களை போன்று தான் எனக்கும் பணி நேரம். எனக்கென்று எந்தவொரு சலுகையும் இருந்தது கிடையாது. அந்த பணியையும் ஆண்களே மெச்சும் வகையில் செய்து காட்டினேன்.

பணியின் போது நெருக்கடி இருந்ததா?

ஆணாதிக்கம் நிறைந்த பணியில் பெண்கள் நிலைப்பது கஷ்டம். சோதனைகளை கடந்து தான் அதில் நிலைக்க முடியும். அந்த நிலைமை தான் எனக்கும் இருந்தது.

என்னுடன் பணிபுரிந்த சக கண்டக்டர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். ஆனால் அதிகாரிகள் எனக்கு பல்வேறு வகையில் இடைஞ்சலை ஏற்படுத்தினர். சிறு தவறையும் பெரிதாக காட்டி எனக்கு நெருக்கடியை உருவாக்கினர். எனினும் நான் சோர்வடையாமல் பணியை விட்டு விலகாமல் களத்திலேயே இருந்தேன். பெண் என்றும் பாராமல் என் காதுபடவே ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுவர். ஆனால் அந்த வார்த்தைகளை உதறி விட்டு என்னுடைய கடமையைச் செய்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு உடல்நிலை சோர்வடைந்தபோது அலுவலக பணியை மாற்றி தரும்படி கேட்டேன். ஆனால் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. இதற்கும் நான் போராட வேண்டி இருந்தது. கோர்ட்டு வரை சென்றும் ஓய்வு பெற இருந்த சில நாட்களுக்கு முன்பு தான் அலுவலக பணியை கொடுத்தனர். 24 வருடமும் சோதனைகளை கடந்து தான் பணியை நிறைவு செய்தேன்.

இப்போது கோவை முதல் பெண் தனியார் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்ற ஷர்மிளாவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை அறிந்தேன். பொதுவாகவே ஆணாதிக்கம் நிறைந்த பணியில் ஒரு பெண் சாதிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். இப்போதும் அந்த நிலை தான் உள்ளது. அந்த நிலைமை தான் ஷர்மிளாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல கசப்பான அனுபவத்தை நானும் அனுபவித்துள்ளேன். ஆனால் முன்வைத்த காலை பின் வைக்காமல் பிரச்சினையை துணிச்சலாக எதிர்கொண்டதால் முன்னேறிச் சென்றேன். பணியின் போது எந்த தொந்தரவு வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொள்ள முன்வர வேண்டும். இப்போதும் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் தமிழகத்தில் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான டிரைவர் பணியில் பெண்கள் உள்ளனர். அந்த நிலை மாறுவது நம் கையில் தான் உள்ளது.

'மகளிர் மட்டும்' படத்தில் முதல் பெண் பஸ் டிரைவரான வசந்தகுமாரியை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் அவர் பஸ்சை ஓட்டி வருவது போலவும், அப்போது நடிகைகள் ரேவதி, ஊர்வசி ஆகியோர் வசந்தகுமாரியை பார்த்து இனி நம்ம ராஜ்ஜியம் தான் என்று சொல்வார்கள்.

பஸ் ஓட்ட தயாராகும் பெண்களுக்கு உங்களுடைய ஆலோசனை?

நான் பஸ் ஓட்டிய போது ஸ்டியரிங் மிகவும் கஷ்டமாக இருக்கும். வளைவில் திரும்ப வேண்டுமென்றால் சிரமப்பட்டு ஸ்டியரிங்கை சுற்ற வேண்டும். ஆனால் இப்போது அதுபோன்ற ஸ்டியரிங் கிடையாது. மிகவும் சுலபமாக ஓட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனால் பெண்கள் சுலபமாக பஸ்சை ஓட்டலாம். எந்தவொரு தயக்கமும் வேண்டாம். எனவே துணிச்சலோடு பஸ் போன்ற கனரக வாகனங்களை ஓட்ட பெண்கள் முன்வர வேண்டும்.

ஆசிய அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது பற்றி?

இந்தியாவின் முதல் பஸ் டிரைவரான நான் 24 வருட பணி அனுபவத்தில் பஸ்சை ஓட்டிய போது எந்தவொரு விபத்தையும் ஏற்படுத்தவில்லை. 3 தடவை விபத்து நடைபெற வாய்ப்பு இருந்தது. கடவுளின் அருளால் அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் விபத்தில்லாமல் பஸ்சை ஓட்டிய முதல் பெண் பஸ் டிரைவர் என தற்போது ஆசிய அளவில் சாதனை புத்தகத்தில் எனக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுபோன்ற சாதனை வரலாற்றில் இடம் பிடித்தது எனக்கு மிகவும் பெருமையை தருகிறது. இதற்காக கலெக்டர் ஸ்ரீதர் என்னை அழைத்து பாராட்டினார். தற்போது சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற ஆசைப்படுகிறேன். மேலும் பணியின் போது சில காரணங்களால் அதிகாரிகள் செய்த செயல் காரணமாக எனக்கு கிடைக்க வேண்டிய முழு பலன்கள் கிடைக்கவில்லை. அந்த குறைபாட்டை நீக்கி எனக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கூடுதல் பலன்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கோாிக்கை என்கிறார் வசந்தகுமாரி.

சோதனைகளை கடந்து சாதித்த வசந்தகுமாரியின் கோரிக்கை நிறைவேற வேண்டும். வரலாற்றில் இடம் பிடித்தவருக்கு சிறப்பு சலுகையை காட்டினால், அது முன்னேற துடிக்கும் பெண்களுக்கும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வசந்தகுமாரிக்கு புகழாரம் சூட்டிய கண்டக்டர்

வசந்தகுமாரி பஸ்சை ஓட்டும் அனுபவம் குறித்து அவருடன் பணிபுரிந்த சக ஊழியரான தற்போது ஓய்வு பெற்ற நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்த ராஜ்குமாரிடம் கேட்ட போது, ''வசந்தகுமாரி முதன் முதலில் பஸ்சை ஓட்டியபோது அவருக்கு நான் தான் கண்டக்டராக இருந்தேன். அவர் பஸ் ஓட்டுவதே தனி அழகாக இருக்கும். எந்தவொரு அச்சமும் இல்லாமல் பஸ்சை ஓட்டுவார். நாகர்கோவிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே அவர் பஸ்சை ஓட்டியது தான் முதல் அனுபவம்.

இதுபோக அவரிடம் இரக்க குணம் உண்டு. வயதானவர்கள், பெண்கள் யாரேனும் பஸ் நிறுத்தத்தை தவிர வேறு இடத்திலும் கையை காட்டி நிறுத்தினாலும் அவர் பஸ்சை பொறுமையாக நிறுத்தி ஏற்றி செல்வார். அவர் தற்போது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை போன்று இன்னும் ஏராளமான பெண்கள் பஸ்சை ஓட்ட முன்வர வேண்டும்'' என்றார்.

தாயை போன்று தனயன்

"நான் பஸ் டிரைவர் பணியில் சேர்ந்து என்னுடைய கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 4 பெண் குழந்தைகளுக்கும் நல்ல படியாக திருமணம் செய்து வைத்தேன். இதேபோல் எனக்கு பிறந்த மகன், மகளும் இல்லற வாழ்க்கையை சந்தோசமாக கழித்து வருகின்றனர்.

நானும் பேரன், பேத்திகளோடு, இவர்களையெல்லாம் கரை சேர்த்த திருப்தியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய கணவர் 2014-ம் ஆண்டு இறந்து விட்டார்.

அவர் இல்லாவிட்டாலும் அவர் செய்ய வேண்டிய கடமைகளை இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன். இதில் என்னை போன்று எனது மகன் அகஸ்டின் டிரைவராக இருக்கிறார். ஆனால் பஸ்சில் அல்ல. பொக்லைன் எந்திரத்தில் டிரைவராக உள்ளார். மகள் அனிலா ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறார்'' என்று பூரிப்புடன் கூறி முடித்தார் வசந்தகுமாரி.


Next Story