உலகின் மிகப்பெரிய பூக்கள்


உலகின் மிகப்பெரிய பூக்கள்
x

மரம், செடி, கொடிகளுக்கு அழகு சேர்ப்பவை பூக்கள்தான். மலர்களை விரும்பாதவர்களும் எவருமில்லை. பூக்கள் பெரும்பாலும் சிறிய வடிவிலேயே காணப்படும். மிகப்பிரமாண்டமாக பூக்கும் மரம், செடிகளும் இருக்கின்றன. அவற்றுள் மனதை கவரும் பூக்கள் சில உங்கள் பார்வைக்கு...

ரப்லேசியா அர்னால்டி:

இது ரப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகிலேயே மிகப்பெரிய, தனித்துவமான மலராக விளங்குகிறது. இந்த மலர் 3 அடி வரை விட்டம் கொண்டது.

சுமார் 11 கிலோ வரை எடை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இதன் மணம் அழுகிய மீனின் வாசத்தை ஒத்திருக்கும். அதனால் இது பிண மலர் என்று அழைக்கப்படுகிறது.

தாலிபோட் பனை:

தென்னிந்தியா மற்றும் இலங்கையை தாயகமாகக் கொண்ட பனை வகை இது. தாளிப்பனை என்று அழைக்கப்படும் இதுவும் மிகப்பெரிய பூங்கொத்து கொண்ட மலர்களின் சங்கமமாக காட்சி அளிக்கும். உலகிலேயே பெரிய பனைமர வகை இதுவாகும். இந்த மரம் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது.

ஜேட் வைன்:

அரிய வகையான `இந்த மலர்', பிலிப்பைன்ஸை பூர்வீகமாகக் கொண்டது. இதன் மலர்கள் நீல-பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும். நக வடிவத்தில் மலரும். தொங்கு பூக்களாக அடர்த்தியாக வளரும். சில பூக்கள் 3 மீட்டர் வரை நீளும்.

புயா ரைமண்டி:

இது தென் அமெரிக்காவின் ஆண்டியன் மலைகளை பூர்வீகமாகக் கொண்டது. 40 அடி உயரம் வரை வளரக்கூடியது. செங்குத்தாக வளரும் இது நீண்ட கூர்முனை கொண்ட பூ இனமாக அறியப்படுகிறது.

அன்னாசிப்பழம் போல் காட்சி அளித்தாலும் ஒவ்வொரு இதழ்களில் இருந்தும் பூக்கள் பூத்து மலரும். அது பார்ப்பதற்கு மலர் கொத்து போல் காட்சி அளிக்கும். ஒரு செடியிலேயே 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூக்கள் மலரும். பூ மலர்ந்து விதை வந்ததும் இந்த செடி மடிந்துவிடும்.

ஜெயண்ட்

வாட்டர் லில்லி:

அமேசான் நதிப் படுகையை பூர்வீகமாகக் கொண்ட இந்த ராட்சத நீர் லில்லியின் பூக்கள் 12 அங்குலம் விட்டம் கொண்டிருக்கும்.

கரிபியன் நாடான கயானாவின் தேசிய மலராக இது விளங்குகிறது. விக்டோரியா அமேசானிகா என்று அழைக்கப்படும் இது உலகிலேயே பெரிய இலைகளை கொண்டது. நன்கு வளர்ந்த இதன் இலை 10 அடி வரை விட்டம் கொண்டிருக்கும்.

அமார்போ பாலஸ்

டைட்டானம்

இது கிளை இல்லாமல் வளரும் செடி இனம். ஆனால் மரம் போல பிரமாண்டமாக காட்சி அளிக்கும். சுமார் 10 அடி உயரத்துக்கு வளரும். இலைகள் பரந்து விரிந்து குடை போல் காட்சி அளிக்கும்.

உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்றாக அறியப்படும் இது டைட்டன் ஆரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோனேஷிய மழைக்காடுகளில் இது அதிகம் வளரும்.


Next Story