வெள்ளை நிற பளிங்கு நினைவுச்சின்னங்கள்


வெள்ளை நிற பளிங்கு நினைவுச்சின்னங்கள்
x

தாஜ்மஹால் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, காதல் மனைவி மும்தாஜுக்கு வெள்ளை பளிங்கு கற்களால் மன்னர் ஷாஜஹான் கட்டியெழுப்பிய பிரமாண்டம்தான். அப்படி வெள்ளை பளிங்கு கற்களால் கட்டமைக்கப்பட்ட வேறு சில நினைவுச்சின்னங்களும் நம் நாட்டில் அமைந்திருக்கின்றன. அவையும் கண்களை கவரும் தோற்றத்துடனும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் விளங்குகின்றன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு....

பீபி ஹா மக்பாரா:

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவி தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக இது கட்டமைக்கப்பட்டது. இதனை அவுரங்கசீப்பின் மகன் முகமது ஆசம் ஷா தனது தாயின் நினைவாக கட்டமைத்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் அமைந்துள்ள இது 1651 - 1661 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. இந்த நினைவிடம் தாஜ்மஹால் போல் வடிவமைக்கப்பட்டதால் இதனை மினி தாஜ்மஹால் என்றும் அழைப்பர்.

விக்டோரியா நினைவு மண்டபம்

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவின் பேரரசியாக விளங்கிய விக்டோரியா மகாராணி 1901-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா இருந்தது. இதையடுத்து அங்கு விக்டோரியா மகாராணியின் நினைவாக நினைவிடம் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. 1906 - 1921-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது.

இதன் கட்டுமானத்திற்கு வெள்ளை மக்ரானா பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தோ-சராசெனிக் கட்டிட பாணியில் வடிவமைக்கப்பட்டது. அதேவேளையில் வெனிஸ், எகிப்திய மற்றும் பிரிட்டிஷ், முகலாய கட்டிடக்கலையின் தாக்கமும் அதில் பிரதிபலிக்கிறது.

விக்டோரியா மகாராணியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்களும், அவரது நினைவுகள் சார்ந்த அம்சங்களும் அங்கு இடம் பெற்றுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அதில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

ஜஸ்வந்த் தடா

இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ள மற்றொரு வெள்ளை பளிங்கு கற்களால் கட்டமைக்கப்பட்ட நினைவிடமாகும். ஜோத்பூர் மகாராஜாவாக விளங்கிய அசர்தார் சிங், தனது தந்தை ஜஸ்வந்த் சிங் நினைவாக இதனை கட்டினார். இதுவும் மக்ரானா பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்த கற்கள் மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருப்பதால் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும்போது கூடுதல் பிரகாசமாக ஒளிரும். இங்கு இடம்பெற்றுள்ள ஓவியங்களும் கண்களை கவரக்கூடியவை. 1899-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட இது பழமையான நினைவிடங்களுள் ஒன்றாகும். இதனை சூழ்ந்து அழகிய தோட்டமும், ஏரியும் காணப்படுகிறது.

ஹாஜி அலி தர்கா

இது சூபி ஞானி ஹாஜி அலி ஷா புகாரி நினைவாக கட்டப்பட்ட நினைவிடமாகும். இங்கு மசூதியும் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரபிக்கடலில் உள்ள சிறிய தீவில் கட்டமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். அலையின் சீற்றம் குறைவாக இருக்கும் சமயத்தில் தரைப்பாலம் வழியாகவும் செல்லலாம்.

ஹாஹி அலி ஷா புகாரி ஹஜ் பயணத்தின்போது மரணம் அடைந்தார். தனது உடலை சவப்பெட்டிக்குள் வைத்து கடலில் வீச வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசையாக இருந்தது. இதையடுத்து கடல் பகுதியிலேேய அவரது நினைவிடம் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டமைக்கப்பட்டது.


Next Story