காலையில் எதற்காக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?


காலையில் எதற்காக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?
x

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து மருத்துவ, உடற்பயிற்சி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் பலரும் ஆர்வம் காண்பிக்காத நிலையே தொடருகிறது. காலை நேர நடைப்பயிற்சி அன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்குவதற்கு வழிவகுக்கும். அத்துடன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். காலையில் எதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

காலை வேளையில் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி மற்ற பயிற்சிகளை ஒப்பிடும்போது மென்மையானது. அதேவேளையில் தசைகளை வலுப்படுத்தும். சீரான எடையை பராமரிக்க உதவும். இதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட அபாயங்களை எதிர்கொள்வதை தடுக்கும்.

காலையில் விறுவிறுப்பாக நடப்பது உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும். நாள் முழுவதும் விழிப்புடனும், கவனமுடனும் செயல்பட வைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். நாள் முழுவதும் நேர்மறையான மன நிலையை அளிக்கும்.

நடைப்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். இயல்பாகவே மன நிலையை மேம்படுத்தும். காலை வேளையில் நடப்பது மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை குறைக்க உதவும்.

காலையில் நடக்கும்போது உடலில் சூரிய ஒளி படுவது உடலின் உள் கடிகார சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். தூக்க விழிப்பு சுழற்சியை சீராக பராமரிக்கவும் வித்திடும். ஆழ்ந்த தூக்கத்தையும் வரவழைக்கும்.

காலை நேர நடைப்பயணம் இயற்கையோடு இணைவதற்கும், சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும், அமைதியான சூழலில் சுற்றுப்புற அழகை ரசிப்பதற்கும் வாய்ப்பளிக்கும். மனதையும் அமைதிப்படுத்தும்.

காலையில் நடப்பது கலோரிகளை எரித்து உடல் எடை இழப்புக்கு வித்திடும். எடை மேலாண்மையை நிர்வகிக்கவும் உதவும்.

நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்தும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அப்படி குழுவாக செயல்படுவது அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்த உதவும். மன நலத்தையும் மேம்படுத்தும்.

நடைப்பயிற்சி போன்ற உடல் எடையை தாங்கும் பயிற்சிகள் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கவும் உதவும்.

காலை நேரத்தில் நடப்பது அறிவாற்றல் திறனையும், நினைவாற்றலையும் பலப்படுத்தும்.

காலை நேர நடைப்பயிற்சிகளை தினமும் நேரம் தவறாமல் தொடங்குங்கள். அந்த நேரத்தை தினமும் பின்பற்றுங்கள். ஏதேனும் நாள்பட்ட உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.


Next Story