

குளித்தலை,
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன், ஆணையர் சுப்புராம், பொறியாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் குளித்தலை நகரப்பகுதியில் உள்ள வார்டுகளில் சாக்கடைகளை தூய்மை செய்ய வேண்டும். வார்டு பகுதியில் நடக்கும் பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் போன்றவை குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
வார்டு பகுதியில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் அளிக்கப்படும். வார்டு பகுதியில் எந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்தப் பணிகள் குறித்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து நிறைவேற்றிய பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தெரிவித்தார். இதில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புகழூர் நகராட்சியில் சொத்து வரி உயர்த்துவது குறித்த முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் 24 பேரும் கலந்து கொண்டனர். சொத்துவரி அதிக அளவில் விதிக்கப்பட்டதாகக் கூறி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர், பா.ஜ.க. கவுன்சிலர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கவுன்சிலர் இந்துமதி சொத்து வரி அதிகமாக உயர்த்தப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 21 கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.