

ஈரோடு
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதா? என்று இளையராஜாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம்
ஈரோட்டில் நேற்று திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுகூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவரது பரப்புரை பயண நோக்கத்தை வரவேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
ஒட்ட நறுக்குவோம்
அப்போது அவர் கூறியதாவது:-
தந்தை பெரியாரின் வாரிசாகவும், அவரது குரலாகவும் இன்றும் ஒலித்துக்கொண்டு இருப்பவர் கி.வீரமணி. 10 வயதிலேயே பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பணிக்கு வந்தவர், 90 வயதை எட்டும் நிலையிலும் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் இந்த வயதில் இப்படி ஒரு பிரசாரம் தேவையா என்று நான் உள்பட பலரும் அவரிடம் கேட்டபோது, இந்த நேரத்தில்தான் சமூக நீதிக்கான இந்த பிரசாரம் தேவை என்று கூறி பங்கு கொண்டு இருக்கிறார். நம்மை பொறுத்தவரை சமஸ்கிருதம், இந்தியை அடித்து துரத்தியதில் 100 ஆண்டுகால பாரம்பரியம் உள்ளவர்கள். ஆதிக்க சக்திகள் மருத்துவப்படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை என்று கூறிய நிலையில் அதை துரத்தியவர்கள் நாம். அதற்கு பிறகும் இந்தி, சமஸ்கிருதம் என்று தலை நீட்டும்போதெல்லாம் ஒட்ட நறுக்கி இருக்கிறோம்.
நீட் அபாயகரமானது
இப்போது வேறு வடிவில் நீட் என்ற பெயரில் வருகிறார்கள்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் சிறு அவமானம் என்றாலும் முதல் குரலை எழுப்பும் ஆசிரியர் கி.வீரமணி இந்த பிரச்சினையிலும் குரல் எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வு அபாயகரமானது. ஏழை எளிய, பிறபடுத்தப்பட்ட, மக்களுக்கு அநீதி இழைப்பது என்று நாம் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தீர்மானம் போட்டு கொடுத்தால், கவர்னர் ரவி, தலை நாற்காலிக்கு அடியில் வைத்துவிட்டு இருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை. கவர்னர் என்பவர் மத்திய அருசுக்கும், மாநில அரசுக்கும் உறவை நல்வழிப்படுத்தும் கடமை உடையவர். ஆனால், இங்கு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான நடவடிக்கையில் உள்ளார்.
போராட்டம்
இதுதொடர்ந்தால் தமிழக மக்கள் போராட்டத்தை கையில் எடுப்பார்கள். போராட்டம் என்பது வன்முறை இல்லாத போராட்டம்.
1930-ம் ஆண்டிலேயே இந்தியை எதிர்த்து அதை விரட்டியடித்து விட்டோம். இப்போது ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே சாப்பாடு என்று கூறினால், இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்.
இளையராஜா
பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசுகிறார். டாக்டர் அம்பேத்கர் இந்த நாட்டுக்காக பல தியாகங்கள் செய்தவர். ஜாதிகளுக்கு இடையே வேற்றுமை கூடாது என்றவர். சாதிய வேற்றுமை நீங்க புத்த மதத்துக்கு மாறியவர். அவர் புத்த மதத்துக்கு மாறிபோது தந்தை பெரியாரையும் அழைத்தார். அப்போது பெரியார், நான் இந்து மதத்தில் இருந்தால்தான் அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். வேறு மதத்துக்கு சென்றால் மாற்று மதக்காரன் அப்படித்தான் சொல்வான் என்று கூறி மக்களை திசை திருப்பி விடுவார்கள் என்றார்.
ஒப்பிட்டு பேசலாமா?
இவ்வாறு மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தியாகங்கள் செய்தவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். ஒரு தியாகியான அவரை மோடியுடன் ஒப்பிட்டு பேசலாமா?. இன்னும் சில நாட்கள் சென்றால் பெரியாரையும், மோடியையும் ஒப்பிட்டு பேசுவார்கள்.
இந்த சூழலில் சரியான பிரசார பயணம் மேற்கொண்டு வரும் ஆசிரியர் வீரமணியின் கரத்தையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரத்தையும் வலுப்படுத்துவோம். வருங்காலத்தில் பாசிசத்தை ஒழிப்போம்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.