கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Published on

பெரம்பலூர்,

கோமாரி நோய்

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் முக்கியமாக உள்ளது. இந்த நிலையில் வழக்கமாக ஆண்டுதோறும் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் நடப்பு ஆண்டில் அதிகமாக தாக்கி வருகிறது. வேகமாக பரவும் கோமாரி நோயால் பசு மாடுகள், ஆடுகள், கன்றுக்குட்டிகள் உள்ளிட்டவை உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் 2 முறை போடக்கூடிய கோமாரி நோய்க்கான தடுப்பூசி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டுகளாக போடப்படவில்லை. அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி கையிருப்பில் இல்லை. இதனால் கோமாரி நோய் முற்றி கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

நஷ்டஈடு வழங்க வேண்டும்

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதால் எங்களின் வருமானம் போய், வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் சித்த மற்றும் ஓமியோபதி முறையில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. கோமாரி நோயை தடுக்க தடுப்பூசியை நிரந்த தீர்வு. எனவே மத்திய அரசிடம் இருந்து போதியளவு கோமாரி நோய்க்கான தடுப்பூசியை தமிழக அரசு மூலம் பெறுவதற்கும் அல்லது போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும்.

மேலும் கோமாரி நோயால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் நஷ்டஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மத்திய அரசு தடுப்பூசி அனுப்பவில்லை

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு கோமாரி நோய்க்கான தடுப்பூசி தமிழகத்திற்கு அனுப்பவில்லை. இதனால் தான் மாவட்டத்தில் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கோமாரி நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு மாதமாக தினமும் ஒவ்வொரு கிராமங்களில் கால்நடைகளுக்கு சுகாதார மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சிகிச்சை மேற்கொள்ளும் கால்நடைகள் குணமடைந்து வருகின்றனர். பால் குடிக்கின்ற கன்றுக்குட்டிகளுக்கு கோமாரி நோய்க்கான அறிகுறி இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் படி ஒரு வாரத்துக்கு, அந்த கன்றுக்குட்டியை பிரித்து வைத்தால் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும். இன்று (வியாழக்கிழமை) புதுவேட்டக்குடி, மேலப்புலியூர், அயிலப்பாடி, கல்பாடி ஆகிய பகுதிகளில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது, என்றார்.

X

Dailythanthi
www.dailythanthi.com