

ஈரோடு
ஈரோட்டில் 2-வது வாரமாக மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் கடந்த வாரம் முதல், ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 2-வது வாரமாக நேற்று மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் மீன் மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இறைச்சி கடைகளில் கூட்டம்
மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை எதிரொலியால் நேற்று மாநகரில் உள்ள கோழி, ஆடு போன்ற அனைத்து இறைச்சி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சி பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டுவரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.