

அரியலூர்,
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அம்பேத்கர் பற்றி பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. அரியலூர் கலை கல்லூரியின் தமிழ் பேராசிரியர் இளையராஜா தலைமை தாங்கினார். காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளன. இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் பங்கேற்றவர்களில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.