

வேலூர்,
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி (வயது 77). இவருடைய மகள் வீடு பக்கத்து தெருவில் உள்ளது. சம்பவத்தன்று இந்திராணி தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோவை நிறுத்தி இந்திராணியிடம் தெரிந்தவர்கள் போன்று பேச்சுகொடுத்தனர்.
பின்னர் நாங்களும் உங்கள் மகள் வீட்டுவழியாகத்தான் செல்கிறோம். ஆட்டோவில் வாருங்கள், உங்கள் மகள் வீட்டில் இறக்கிவிடுகிறோம் என்று கூறி அவரையும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர். இந்திராணியை அவருடைய மகள் வீட்டின் அருகில் இறக்கிவிட்டு விட்டு சென்றனர்.
3 பவுன் நகை பறிப்பு
இந்திராணி அவருடைய மகள் வீட்டுக்கு சென்றதும், தாய் கழுத்தில் செயின் இல்லாதது குறித்து அவருடைய மகள் கேட்டுள்ளார். அப்போதுதான் ஆட்டோவில் அழைத்து வந்த பெண்கள் செயினை பறித்து சென்றதை அறிந்து இந்திராணி அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இந்திராணியிடம் நகையை பறித்துச்சென்ற பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.