தமிழக முதல்–அமைச்சரின் பெயரை கூறி, நில அபகரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டக்கல்லூரி மாணவி மனு

தமிழக முதல்–அமைச்சரின் பெயரை கூறி, நில அபகரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், சட்டக்கல்லூரி மாணவி மனு
தமிழக முதல்–அமைச்சரின் பெயரை கூறி, நில அபகரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டக்கல்லூரி மாணவி மனு
Published on

திருப்பூர்,

தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறி நில அபகரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தனது உறவினருடன் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் எஸ்.ஜெயந்தியிடம் காங்கேயம் வட்டமலைக்கரை பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி விதுலா புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பெங்களூரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறேன். பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை செயலாளராகவும் இருந்து வருகிறேன். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வங்கியில் அடமானமாக உள்ளது. நிலம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த நிலத்தை அருகில் உள்ள தனியார் அறக்கட்டளையை சேர்ந்த ஒருவர், வங்கியில் இருந்து ஏலத்தில் எடுத்து கொண்டதாக கூறி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதுதொடர்பான விசாரணையில் போலியான ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் ஆக்கிரமித்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக நில அபகரிப்பு செய்யும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சட்டக்கல்லூரி மாணவி மேலும் கூறியதாவது, நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து ஆவணங்களை கேட்டால், தமிழக தற்போதைய முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் நெருக்கமானவர்கள் என்று கூறி எங்களை மிரட்டி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதுபோல திருப்பூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாகன விபத்தில் சிக்கிய நபர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாங்கள் பல்வேறு விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த வழக்குகள் திருப்பூர் கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பல வருடங்கள் ஆகியும் தங்களுக்கான விபத்து இழப்பீடு கிடைக்காததால் உடனடியாக அந்த தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com